Monday, December 13, 2010

சாருவின் கோலகல விழா..

சாரு டிசம்பர் 13 புத்தக வெளியீடுன்னு சொன்னதுமே முடிவான விசயம் நான் புத்தக வெளியீட்டுக்கு செல்வது, 6 மணி விழாவுக்கு 4 மணிக்கே கிளம்பினேன், காரணம் எனக்கு காமராஜர் அரங்கம் தெரியாது, தட்டுத்தடுமாறி தி.நகரில் நண்பர் எழுத்தாளர் விஜயமகேந்திரனின் உதவியுடன் அரங்கத்திற்கு வந்து சேர்ந்தேன். சமோசா, டீ எல்லாம் முக்கியம் இல்லை முதல்ல குஷ்புவை பார்க்கணும்னு ஆசையில் நேராக அரங்கத்திற்கு உள்ளே நுழைந்தோம்.

அப்போதுதான் மனுஷ்யபுத்திரன் மேடைக்கு அழைக்கப்பட்டிருந்தார், அப்பாடா சரியான நேரத்திற்கு வந்தாச்சு அப்படின்னு ஒரு மனத்திருப்தியோட தனியே தன்னந்தனியேன்னு ஒரு சீட்டை பிடிச்சு அமர்ந்தேன்.

நான் மேடையில் பார்த்த முகங்கள் அனைத்தும் என் வாழ்நாளில் முதன் முறையாக பார்க்கிறேன். பெரும் சந்தோசம் எனக்கு 17 வருடமாய் படிப்பவன் முதன் முறையாக படைப்பாளிகளை பார்க்கும் அனுபவம் வார்த்தைகள் இல்லை விவரிக்க. என் பெயரில் பாதியை வைக்கும் அளவுக்கு பாதித்த மதனும் என் எதிரே..

நான் படிக்க ஆரம்பிக்க காரணமாய் இருந்த மதன், நான் வியந்துருகும் மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், இவரின் கேள்விகுறியிலும், தேசாந்திரியிலும், அவருடன் நானும் சகப்பயணியாகவே அவருடன் பயணித்திருக்கிறேன். மிஷ்கின், நந்தலாலாவை திட்டும்போதெல்லாம் முதல் ஆளாய் எதிர்த்திருக்கிறேன். காரணம் மிஷ்கின் என்ற படைப்பாளி, அது காப்பியாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை எனக்கு அது மிஷ்கின் படம்தான். என்னைப்போல் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு இதுவே உயர்ந்தப்படம். தமிழ் சினிமாவில் நான் மிக எதிர்ப்பார்க்கும் ஒரு படைப்பாளி..

இவர்களை எல்லாம் நான் பார்க்க காரணமாய் இருந்த சாரு.. சாருவின் எழுத்துக்களை நான் கடந்த இரண்டு வருடங்களாகத்தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இவரின் ராஸலீலா, எக்ஸ்டென்ஸியலிசமும் பேன்ஸிபனியனும், இந்த இரண்டுபுத்தகங்கள் மட்டுமே முழுவதும் வாசித்திருக்கிறேன். படிப்பின் என்னுடைய அடுத்தகட்டம் சாரு என்று கண்டீப்பாக சொல்வேன். சுஜாதா, ஜெயகாந்தன் காட்டிய மொழிகளுடன் மேலும் புதிய அனுபவத்திற்கான மொழியை எனக்கு கொடுத்தவர் சாரு.

உங்களை எல்லாம் சாருவின் எழுத்துக்கள்தான் வசீகரிக்கும், ஆனால் என்னை வசீகரித்தது அவரின் பெயரும் அவரின் வாழ்க்கையும்.. அவரின் படைப்புகள் எனக்கு புரிந்தாலும் புரியாமல் போனாலும் நான் அவரின் வாசகன், அவரைப்போல வாழ ஆசைப்படுபவன்.. அவர் முன் வீசப்படும் ஆபாச வார்த்தைகள் அவர் முன்பு எப்படி திரண் இன்றி சாகிறதோ அதுப்போல் என்னாலும் முடியவேண்டும் என்று ஆசைப்படுபவன்.

சரி விழாவுக்குப் போகலாம்..

பேசியவர்களின் அனைத்துக்கருத்துகளையும் இங்கு என்னால் சொல்ல முடியாது, என்னைச் சேர்த்து அணைத்தக் கருத்துக்களை மட்டும் உங்களுடன் பகிர்கிறேன்.

முதலில் மனுஷ்யபுத்திரன் பேசும்போது பாதி அரங்கம் காலியாய் இருக்கிறது என்று கவலைப்பட்டார், நிச்சயமாக வருத்தப்படவேண்டிய விசயம், தமிழ் படிப்பவனின் படிப்பு ரசனையை உயர்த்தாமலே வைத்திருக்கிறார்கள் அச்சு ஊடங்கள், தினத்தந்தியும் குமுதமும் படிப்பவன் மேலே வரவேண்டுமானால் அவர்கள் அவனுக்கு படிப்பின் ரசனையை எடுத்துக்கூற வேண்டும்..

நான் ஒரு காலத்தில் குமுதமும், ஆனந்த விகடனும் தவிர வேறு புத்தகங்களே இல்லை என்பது போல் இதுதான் எழுத்து உலகமே என்று வாழ்ந்திருக்கிறேன்.. அப்போது என் வாசிப்பிற்கு கிடைத்தவர் மதன் மட்டுமே.. காரணம் எனக்கு அடுத்த கட்டத்தை அறிமுகப்படுத்த யாருமே இல்லை, நான் கிராமத்தில் இருந்து வந்தவன், எங்கள் ஊரில் நூலகம் இல்லை, நான் படிக்க அரம்பிக்கும் போது எனக்கு கிடைத்ததெல்லாம் அதிகபட்சம் கல்கி.. எந்தசாமி புண்ணியமோ எனக்கு இணையம் பரிச்சயமான பின்புதான் நான் என்னை அடுத்தக்கட்ட வாசிப்பிற்கு நகர முடிந்தது.

நிச்சயமாய் ஒரு எழுத்தாளனின் புத்தக வெளியிடு கடற்கரையில் நடக்கும் , அதற்கான அடிப்படைகளை நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்தி செல்ல வேண்டியது நமது கடமை. நீங்கள் செய்த அந்த பணி இன்று நான் இந்த அரங்கிற்குள் அமரக்காரணம், இதைத் தொடர்ந்து செய்தால் நிச்சயம் சாமனியக்கும் நம் இலக்கியமும் மொழியும் சென்றடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மதன், சாருவின் மீதான அவரின் பார்வை நான் அவரை தொடர்வதாலோ என்னவோ என்னுடைய பார்வையாகவே தெரிந்தது. சாருவின் நெஞ்சு நிமிர்த்தி குற்றம் சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை, கமல்ஹாசனாக இருந்தாலும் இளையராஜாவாக இருந்தாலும் சாருவிடம் எனக்கு மிக பிடித்த விசயம் அவரின் காம்ப்ரமைஸ் இல்லாத எழுத்து, ஒரு எழுத்தாளனாய் என் எழுத்துக்களால் உன்னை துதிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று யாரிடமும் நீங்கள் சொல்லும் அந்த நேர்மைக்கு சிரம் தாழ்த்துவது தவிர வேறு வழியே இல்லை. சாரு சொல்வதை கொஞ்சம் மென்மையாக சொல்லுங்கள் என்று மதன் சொன்னது சாருவின் மீது அவர் வைத்திருந்த அன்பு.

மிஷ்கின் வந்தவேலையை தவறாக செய்தவர்.. ஏன் மிஷ்கின்?? இது போல் மேடை கிடைக்கும் போதுதான் பேச முடியும் என்று உங்கள் கதையை பேச தாராளமா ப்ரஸ் மீட் வைத்துஆனந்த விகடன் பேட்டியோ, குமுதம் பேட்டியோ கொடுத்திருந்தால் உலகம் முழுவதும் உங்கள் கருத்து சென்றடைந்திருக்குமே?? நான் நந்தலாலாவிற்கு கஷ்டப்பட்டேன் என்று சொன்னீர்களே?அதே போல் ஒரு எழுத்தாளனும் கஷ்டப்பட்டும் எழுதிய எழுத்துக்கள் மக்கள் கைக்கு சேரும் மேடையில் நீங்கள் செய்தது என்ன நியாயம் என்று தெரியவில்லை. சாருவின் எழுத்துக்களை நான் படிக்க வில்லை 2 பக்கம்தான் படித்தேன் அதுவே எனக்கு கிளர்ச்சியாக இருந்தது ஒரு படைப்பாளியை இதை விட நீங்கள் கேவலப்படுத்தி இருக்க வேண்டாம், நீங்கள் 50 வருடம் படிக்க புத்தகம் வாங்கி வைத்திருப்பதாய் சொன்னீர்கள் ஆனால் படிக்கிறீர்களா? என்று சந்தேகம் வருகிறது எனக்கு. நீங்கள் ஒரு 600 பக்க புத்தகம் படித்ததாக சொன்னீர்கள் "நம் முன்னோர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள்" இதைப்படித்ததும் அந்த புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டேன் என்றீர்களே.. நீங்கள் எப்படி படைப்பாளி?? உங்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளவில்லை என்று கஷ்டப்படும் நீங்கள், சாருவின் புத்தகத்தை சரோஜாதேவி தோற்றது என்ற போது என்ன நிலையில் அவர் இருந்திருப்பார் என்று யோசித்தீர்களா? படிக்கலன்னா படிக்கலன்னு சொல்லிட்டு போங்க.. நல்லி குப்புச்சாமி செட்டியார் சொல்லவில்லையா நான் முழுவதும் படிக்கவில்லை என்று. அதுதான் வயது முதிர்ச்சி கொடுத்த அறிவா?? உங்கள் நந்தலாலாவை பார்க்காமல் குப்பை என்று சொல்லி இருந்தால் எவ்வளவு நொந்திருப்பீர்கள்.. அந்த வேதனையை நீங்கள் சாரு கொடுத்திருக்கிறீர்கள்.

தேகம் என்ற ஒற்றை வார்த்தைக்கு இதைத்தான் எழுதி இருப்பார்கள் என்று சினிமாகாரன் புத்தியில் நீங்கள் பேசியது நீங்கள் மீண்டும் உங்கள் மீதான அபிப்பிராயத்தை உரசிப்பார்க்கவைத்திருக்கிறீர்கள்.இதற்க்காக சாரு நொந்து கொள்வாரே தவிர வருத்தப்படமாட்டார் என்று எல்லோருக்கும் தெரியும்.. இதற்க்காக சாரு கொடுத்த பதிலடி "நச்" சாரு நிவேதிதாவை படிக்க வில்லை என்றால் உங்களால் சாருவை புரிந்துகொள்ள முடியாது. சாருவின் வார்த்தையில் சொன்னால் மிஷ்கின் நுனிப்புல் கூட மேயாதவர்.
(போதும் மிஷ்கினை விட்டுவிடலாம் இது முடியாது)

அடுத்து பேச வந்தவர் எஸ்.ரா அவர் பேச்சும் என்னை சக பயணியாக்கிக்கொண்டது. எழுத்தை பேச்சிலும் கொண்டு வந்தவர்களின் நிச்சயம் எஸ்.ரா வும் இருப்பார். வதைகள் எங்கு ஆரம்பிக்கிறது என்று ஆரம்பித்து எழுத்தாளனின் அவலத்தை நினைவு படுத்திப் பகிர்ந்தார். பாலியலையும், மதத்தையும் ஏன் நாம் விவாதிக்க விரும்புவதே இல்லை என்ற அவரின் பேச்சு அருமை.

இறுதியில் சாரு நன்றியுரையுடன், தமிழ் எழுத்தாளனுக்கு ஏற்பட்ட அவல நிலை கண்டு கோபம் கொண்டார். பனகல் பார்க்கில் புல் தின்றதும், திருவல்லிக்கேணியில் எஸ்ராமகிருஷ்ணனும், தானும் சோறில்லாமல் பட்ட கஷ்டங்களையும் சொல்லி கோபப்பட்டார், சாருவின் கோபத்திற்கு தகுதியுடையதே இந்த தமிழ் சமுதாயம், பாரதி முதல் ஸ்டெல்லா புரூஸ் வரை இந்த அவலம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வரும்காலமாவது எழுத்தாளர்களுக்கு நல்லகாலமாய் அமைய வேண்டும் என்பது என் ஆசை.

சாருவின் அத்தனைப்புத்தகங்களும் வாங்கி இருக்கிறேன். சாருவிடன் ஒரு கையெழுத்து வாங்க ஆசைப்பட்டேன், அவர் புத்தக சந்தையில் செய்கிறேன் என்று சென்று விட்டார். கையெழுத்துக்குக் காத்திருந்தாலும் கை கொடுத்ததை நினைத்துக்கொள்கிறேன். மனுஷ்யபுத்திரனிடம் கையெழுத்தை பெற்றுக்கொண்டேன்.

மதனிடன் பெற நினைத்தேன் ஆனால் விழா முடியும் வரை அவர் இல்லாததால் என்னால் வாங்க முடியவில்லை. எப்படியும் அவரையும் புத்தக சந்தையில் பிடித்துவிடவேண்டும்.

இரவே இந்த பதிவை எழுத நினைத்தேன், ஆனால் "மழையா பெய்கிறது" படிக்க ஆரம்பித்ததால் அதை முடித்துவிட்டு இதை எழுதி இருக்கிறேன்.

பின் குறிப்பு: முன்னாடி எழுதிய குஷ்பு விசயம் சும்மா ஒரு கிளுகிளுப்புக்காக சேர்த்தது. குஷ்பு வரவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் அவர் இல்லாததாலேயே என்னால் இவ்வளவு கவனிக்க முடிந்தது எனபதை ஒப்புக்கொள்கிறேன்.

முக்கியமான விசயம் : சாருவை சண்டைக்காரராக மட்டும் பார்ப்பவர்களுக்கு, அவர் ஒரு அற்புத மனிதர்.

நன்றியுரையில், விழா ஏற்பாடு செய்தவர்களை மறந்துவிட்டேன் நாளை பதிவில் சொல்லிவிட வேண்டும் என்று ஒரு கடைநிலை மனிதருக்கு நன்றி கூறவேண்டும் என்று நினைத்த நல்ல மனிதர் சாரு.

என்னிடம் படம் எதும் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். :)

எழுத்துப்பிழைகளை மன்னிக்கவும்..


Monday, November 22, 2010

வயது முதியவர்கள்

நேற்று திருமங்கலத்தில் இறங்கி நடக்கையில் பாதையோரத்தில் கேட்ட ஐயா என்னை திசை திருப்பியது ஒரு வயது முதிர்ந்த பாட்டி என் பாட்டி வயதிருக்கும் கை நீட்டி அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நான் கையில் இருந்த சில்லரையை அவர் கையில் வைக்கயில் அந்த பாட்டியின் கண்ணில் கண்ணீர், "பசிக்குதுயா" எதாவது வாங்கி கொடு என்றார். என்னால் அது முடியாததால் மேலும் 10 ரூபாயை கையில் வைத்து விட்டு திரும்பிப்பார்க்காமல் நடந்துவிட்டேன்.

இவர்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறார்கள், இவர்களுக்கு யாரும் இல்லையா?? இவர்கள் மழைவந்தால் எங்கிருப்பார்கள்? இவர்களின் பிள்ளைகள் யார்? ஏன் இந்த நிலை?? காரணம் யார்?? இவர்களின் இளம் வயது எப்படி இருந்திருக்கும்?? இவர்கள் இந்த உலகில் மேலும் வாழ விரும்பும் காரணம் என்ன?? ஒரு சக மனிதனின் வாழ்வியல் ஆதாரமான பசியைக்கூட மதிக்காத இந்த சமுதாயம் எதை நோக்கி போய் கொண்டிருக்கிறது??

எண்ணற்ற கேள்விகள் என்னுள்ளே... இதுவும் கடந்து போகுமா??

நானும் ஒரு ஞாயிறும்..

வழக்கமாக ஞாயிற்று கிழமை புத்தகத்துடன் அறையிலேயே கிடப்பது வழக்கம். நேற்றும் பாலக்குமாரனில் இரும்பு குதிரைகள் கொடுத்த குடைச்சலுக்கு பீச்சில் நின்று ஒரு தம்மடிக்க வேண்டும் போல் இருந்தது. இருந்தாலும் ஒரு நாள் பஸ்பாஸுடன் சென்னையை சுற்றிவருவது மட்டுமே நோக்கத்துடன் என் அறை நண்பனுடன் கிளம்பினேன்.

வழக்கமாக நான் பஸ்ஸில் அமைதியாக செல்லும் பழக்கம் இல்லாதவன். அதுக்காக பாட்டுப்பாடுவியான்னு கேட்காதீங்க. பஸ்ஸில் இருக்கும் ம் சுமாரான பிகருக்கு ரூட் விட்டுகிட்டே போவேன். சீட் கிடைச்சதும் புக் படிக்க ஆரம்பித்து விடுவேன். எங்க நேரம் பஸ் ஏறினதும் ஒரு சுமாரான பீஸ் கீடைச்சது என் நண்பனுக்கு அந்த பொண்ணுகிட்ட இருந்து நல்ல ரெஸ்பாண்ஸ், அதனால் அண்ணா நகர்ல இறங்க வேண்டிய நாங்கள் கிண்டிவரை செல்ல வேண்டியதாக இருந்தது. என் நண்பனுக்கு அந்த பெண் கொடுத்த கம்பெனி ஹைலி சென்சார்டு. (இதற்கு மாதர்சங்கத்திடம் இருந்து கடிதம் எதிர்ப்பார்க்கப்படுகிறது).

அதன் பிறகு என் நண்பனை ராயப்பேட்டையில் விட்டுவிட்டு சென்ற இடம் சென்னையில் புது ஷாப்பிங்க் மால் எக்ஸ்ப்ரஸ் அவென்யூ. வழக்கமாக நான் இங்கு சண்டே நடக்கும் சிறு நிகழ்ச்சிகளை பார்க்கவும், பெண்களின் தாராள மயமாக்கலை ரசிக்கவும் மட்டுமே. என்னால் அங்கு ஒரு குண்டூசி கூட வாங்க முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

உள்ளாடை தெரியும் மேலாடைகளையும், உள்ளாடைகளே மேலாடைகளாக தெரிந்ததும் நன்றாகவே இருந்தாலும், நான் பார்க்க கூச்சப்பட்டேன் ஆனால் யாரும் அதை அணிய கூச்சப்பட்டவர்களாய் தெரியவில்லை. வருபவர்கள் அனைவரிடம் எதோ பணக்கார செயற்கைதனம் மிகுதியாகவே பட்டது. கட்டிபிடித்து நடக்கும் காதலர்கள், துப்பட்டா போடாத பெண்கள், டைட் டீ சர்ட்கள், மினி ஸ்கர்ட்கள், லெக்கீங்க்ஸ், இது எல்லாமே தன்னை மேல் மட்டத்தினனாக காட்டி கொள்ள போடும் வேஷமாகவே பட்டது. அவர்களின் உண்மை வாழ்க்கையை காட்ட பயப்படுகிறார்கள். உலகம் நம்மை மதிக்காமல் போய் விடுமோ என்று தயங்குகிறார்கள்.

வெளியில் 12ரூபாய்க்கு கிடைக்கும் பெப்ஸியையும், கோக்கையும் 35 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன?? தெரியல, இங்கே கிடைக்கும் பொருட்கள் சென்னையில் தரமானவை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சென்னையில் விலை அதிகமானவை என்று சொல்ல முடியும்.

என்னால் அதற்குமேல் அங்கே இருக்க முடியவில்லை வெளியேறினேன். வெளியே வரும்போது எதிரே இருக்கும் சர்ச் வாசலில் இரண்டு வயதான பிச்சைக்காரர்களை பார்த்து உங்களுக்கு இல்லை இந்த உலகம் என்று நினைத்துக்கொண்டேன்.

மனதில் மனிதரிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வு குறித்து எக்கசக்கமான யோசனையில் கடற்கரைக்கு செல்ல தீர்மானித்தேன். கண்ணகி சிலையில் இறங்கி 2 ரூபாய்க்கு 62 கிலோ என்ற என் என்எடையை பார்த்துக்கொண்டேன். இரண்டு இரண்டு ரூபாயாக சேர்த்து வாழ்க்கையை வாழும் அந்த அம்மாவை யோசித்தேன். இவங்களுக்கு ஸ்பெக்ராம் தெரியுமா? ஒபாமா தெரியுமா?? தான் ஏன் இந்த நிலையில் இருக்கிறோம் என்றாவது தெரியுமா??

கடற்கரை மணலில் நடந்தேன்.. காதலுக்கு கண் இல்லை ஆனால் வயசு உண்டு.. புதிய காதலர்கள் எதிரெதிராகவும், கொஞ்சம் பழையகாதலர்கள் கைகோர்த்தபடியும், சில ஆண்டுகளாக காதலிப்பவர்கள் மடியிலும் படுத்து கொண்டு காதலித்தார்கள். இவர்களின் நோக்கமெல்லாம் தாலிக்கட்டி முதலிரவு எப்போது நடக்கும்?? அதற்கு ஒத்திகைக்கு இடம் இதுவாக இருக்க கூடாதா என்பதாகவே இருப்பதாய் பட்டது.

குதிரையில் வாக்கிங்க் போனார்கள், சேரி சிறுவர்கள் பட்டாசு வெடித்தார்கள், மற்றவர்கள் எதையாவது தின்று கொண்டிருந்தார்கள். ஏன் இப்படித்தின்னுகிறார்கள் என்றே தெரியவில்லை.?திருவிழா, வீட்டில் விசேசம், டூர் எல்லாவற்றிலுமே திண்பது என்பது தமிழனுடன் பழகிவிட்டது.ஆனால் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை மறந்துவிட்டார்கள். சமீபத்தில் வட இந்தியர்களிடம் இருந்து பாக்கு தின்ன கற்று இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் துப்புகிறார்கள். பார்க்கும்போதே முகத்தில் குத்த வேண்டும் என்று தோன்றுகிறது.

ஆண்கள் ஜட்டியுடன், குழந்தைகள் ஜட்டி கழண்டு போவது தெரியாமலும், பெண்கள் எதையும் மறைக்காமலும் குளித்தார்கள். பெண் போலீஸாரும் சக தோழிகளுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். பெண்கள் குளிக்கும் இடத்தில் ஆண்கள் கூட்டமாய் ரசித்தார்கள். குடும்பத்துடன் வந்த ஆண்கள் சட்டையில்லாம தண்ணீரில் நின்று கொண்டு பெண்களையும், குழந்தைகளையும் கடலில் இழுத்துக்கொண்டிருந்தார்கள். தனியாக வந்திருந்த ஆண்களூம் நண்பர்களுடன் வந்திருந்த ஆண்களூம் பெரும்பாலும் டாஸ்மாக்கில் இருந்து வந்திருந்தார்கள். எல்லோரும் தன்னிலை மறந்த சந்தோசத்தில் இருந்தார்கள். இந்த கணம் எல்லோருக்கும் நிலைக்கட்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

சிறிது நேரம் நானும் அலையுடன் ஓடிப்பிடித்து விளையாடினேன், அலை சிலநேரம் என்னைப்பிடிக்க வேகமாய் வந்து கரையில் இருந்த மற்றவர்களைத் தொட்டு சென்றது. அவர்களும் அதை ஆர்பரித்தார்கள். இறுதியில் நான் விட்டுக்கொடுத்தேன் என்னை அடிக்கடி அலைத்தொட்டு சந்தோசப்படுத்தியது. நான் விட்டுக்கொடுத்ததற்காக கிளம்பும் போது என்பாதம் முழுக்க மணலை பரிசாக கொடுத்தது. எவ்வளவு மக்கள் அனைவருக்கும் தனித்தனி உலகம். நான் என் விதியை நொந்து கொள்வது போல்தானே அனைவரும் நொந்து கொள்வார்கள்.

மீண்டும் மனதில் குழப்பம் எதைத் தேடுகிறோம் எல்லோரும்?

குழப்பத்தில் கரையேறும் போது நீச்சல் குளத்திற்கு அருகில் இருக்கும் மரத்தடியில் மக்கள் கூட்டமாய் வேடிக்கைப்பார்த்துகொண்டிருந்தார்கள். நானும் கூட்டத்தோடு கூட்டமானேன். ஒரு ஜடா முடியுடன், கிழிந்து போன 3 பைகளும், கையில் 2 வாட்ச், கழுத்து நிறைய மணிகள், குளிக்காத உடம்பும், விளக்காத பல்லுமாய் ஒரு சாமியார் 3 குரங்குகளுடன் இருந்ததையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

என் மனதுக்குள் மீண்டும் குழப்பம் இவருக்கான தேடல் என்னவா இருக்கும்?? இவரும் இதே பூமியில் வாழும் ஜீவன் தானே?? இவரைசுற்றி தினமும் ஆயிரக்கண்க்கானோர் வருகிறார்கள் செல்கிறார்கள் இதையெல்லாம் இவர் எப்படி பார்ப்பார். பக்கத்தில் கடலே இருந்தாலும் குளிக்காமல் இருக்காரே?? ஒரு வேலை நம்மை பார்க்க இவருக்கு பைத்தியம் போல தெரிவோமோ?? அதிலும் தவறிருப்பதாய் தெரியவில்லை.

பிறப்பிற்கு பின் இறப்பை நிச்சயமாய் கொண்ட நாம் செய்யும் செயல்கள் பைத்தியக்காரத்தனம் தானே?? பணம், கவுரவம், மரியாதை மதிப்பு என்று வாழும் இந்த வாழ்கையின் முடிவும் மரணம்தானே??. நாம் இறந்த பிறகு எத்தனைநாள் இந்த உலகம் என்னை நினைத்திருக்கும்?? 15நாள்.. ??இறந்த பின் 15 நாள் இந்த உலகத்தில் என்னைப்பற்றி பேசுவதற்காக நாம் என் வாழ்நாள் முழுவதையும் போலியாகவே வாழ்கிறோம்.

நான் ஜெயகாந்தன், சுஜாதா, என்று பேசுகிறேன், இவருக்கு யாரைத்தெரியும், ஆனாலும் என்னைப்போல் இவரும் ஒரு ஜீவன் தானே?? மாதம் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் போதவில்லை எனக்கும் என் குடும்பத்துக்குமே, ஆனால் தினமும் வெறுங்கையுடன் விழிக்கும் அவர் 3 ஜீவன்களுக்கு உணவளிக்கிறார். யாருடைய வாழ்க்கை உயர்ந்தது.??? கடவுளைக்கண்டது போல் இருந்தது, ஒரு நாள் முழுக்க அவருடன் இருக்கவேண்டும் என்று தோன்றியது.. அவர் எந்த ஊர் என்று கேட்டேன் சூளைமேடு பக்கம் என்றார், அப்பா அம்மா எல்லாம்?? இருக்காங்க பொண்டாட்டி பிள்ளைகளே போயிடுச்சு மத்தவங்க என்ன??

நெக்குறிகி போனேன், பெற்ற தாயை விட தன் மனைவியையும் பிள்ளையையும் நேசிக்கும் ஒரு ஜீவன், அவர்கள் இல்லை என்பதற்காக தன் வாழ்க்கையை இப்படியாக்கி கொண்டவன், இந்த மனிதனை எப்படி பார்ப்பது என்று எனக்குப்புரியவில்லை..

தினமும் இங்கேயேதான் இருப்பீர்களா என்று கேட்டுக்கொண்டு 50ரூபாயை கொடுத்தேன். அவர் நன்றி புன்னகையை பூக்கவும் இல்லை நான் எதிர்பார்க்கவும் இல்லை. வாழ்க்கையில் நான் சந்தித்த முக்கியமான நபரில் ஒருவராகத்தான் அவரைக்கருதுகிறேன்.Monday, November 15, 2010

நகரத்திற்கு வெளியேநான் போன தலைமுறை எழுத்தாளர்களையே படிக்காததால் நான் புதிய தலைமுறை எழுத்தாளர்களை படிக்கவே ஆரம்பிக்க வில்லை. சமீபத்தில் ஒரு புத்தக கடை நண்பரிடம் புதிய எழுத்தாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டு பல்ப் வாங்கியது என் மனதில் இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் நான் புதிய தலைமுறை எழுத்தாளர்களின் முதல் முதலில் நான் படித்த புத்தகம்தான் நகரத்திற்கு வெளியே. தலைப்புதான் வெளியே படிக்கும் போது நம்மை உள்ளே கொண்டு செல்கிறது புத்தகம்.

10 கதைகள் உள்ள தொகுப்பாக இருந்தாலும் என்ன வெகுவாக பாதித்தகதைகளை மற்றும் இங்கு பகிர்கிறேன். மேலும் இது விமர்சனம் அல்ல, ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தில் யாரும் தலையிடக்கூடாது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. தாய்க்கு எல்லா குழந்தையும் அழகுதான் ஆனால் பார்ப்பவர்களின் பார்வைதான் மாறுபடும். கண்டீப்பாக விஜய் மகேந்திரன் கொடுத்தது அவரின் சிறந்த பிள்ளைகளைத்தான் அதில் என்னுடன் அதிகம் உறவாடிய, என்னை எனக்கு நினைவு படுத்திய குழந்தைகள் எனக்கு மிக அழகாக தெரிகிறார்கள் அவர்களைப்பற்றி மட்டுமே நான் எழுத ஆசைப்படுகிறேன். இதை படித்து என்னை விமர்சிக்கும் உரிமையும் உங்களுக்கு இல்லை ஏனெனில் இது என் எண்ணம் உங்கள் எண்ணத்தை ஒத்திருக்க வேண்டும் என்பது என் தவறல்ல.

நான் எப்போது எழுத்துக்களை ரசிப்பவன் இல்லை சில நேரங்களில் நமக்கு கருத்துடன் சேர்ந்து எழுத்தும் ரசிக்க கிடைக்கும் போது என் சந்தோசம் மேலும் அதிகமாகிறது. சமீபத்தில் ரெட்டைத்தெரு படித்த போது என்னால் எழுத்தை மட்டுமே ரசிக்க முடிந்தது கருத்துக்கள் காணாமல் போய் ஒரு ஆயாசம் தான் வந்தது. இதில் அந்த ஆயாசத்தை விஜய் மகேந்திரன் எனக்குத் தரவில்லை.

சிரிப்பு நான் இனி எப்போது சிறுகதைகளைப்பற்றி சிந்தித்தாலும் எனக்கு எப்போதும் நினைவுக்கு வரும் ஒரு கதையாக இருக்கும் .

ஒரு வேலையில்லாதவனிடம் சோகம் எப்போதும் இளையோடிக் கொண்டே இருக்கும். எனக்கும் ஒரு காலத்தில் இருந்தது அதை அப்பட்டமாக எனக்கு திருப்பி காட்டியது இந்த கதை. நானும் எத்தனையோ நாட்கள் சாப்பாடு இல்லாமல் கோவில் வாசலில் தனிமையில் அழுதிருக்கிறேன். இந்த கதை எனக்கு ஊதிய பலூனில் குண்டூசி ஏற்றியது போல் இருந்தது, படித்த வேகத்தில் என் கண்ணில் நீர் துளிக்க வைத்தது.

அடுத்து ராமநேசன் எனது நண்பன்.. வாழ்க்கையில் சில வேலைகளின் நாம் விரும்பியோ விரும்பாமலோ நம்முடன் இருக்கும் சிலரால் நம் வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் சந்தோசமாகவும் இருக்கும் அப்படிப்பட்ட ஒருத்தன்தான் இந்த ராமநேசன். எனக்கு ராமநேசனைப்போல் நண்பர்கள் கிடையாது ஆனால் நானே ஒருகாலத்தில் ராமநேசனாய் வாழ்திருக்கிறேன்.

இருத்தலின் விதிகள்
ஒரு சாமானியனின் வாழ்க்கையை அப்பட்டமாக தோலுரிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் ஒரு வாசிப்பாளனின் நிலை இதுவாகத்தான் இருக்கிறது. ஒரு சாதரண குடும்பத்தில் வாசிப்பாளனாக இருப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும், 50 ரூபாய்க்கு புத்தகம் வாங்கினால் 100 கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இடையில் வரும் பத்திரிகைவெளியீட்டாளரின் பாத்திரம் மூலம் பத்திரிக்கையாளர்கள் மீதான சாயப்பூச்சை தெளிவாக உரித்திருக்கிறார் ஆசிரியர். வாழ்வியல் விதிகளே இவரின் இருத்தலின் விதிகளாய் இருக்கிறது.

நகரத்திற்கு வெளியே ஆண் எல்லா நிலைகளிலும் ஆண்தான் என்பதை சொல்லும் சிறுகதை இந்த கதையின் முடிவு பாதியிலேயே என்னால் யூகிக்க கூடியதாய் இருந்தது. இதுபோன்ற கதைகளில் சுஜாதா கைதேர்ந்தவராக இருந்தாலும் எழுத்து நடையில் முற்றிலும் வேறுபடுகிறார் விஜய் மகேந்திரன்.

இதுப்போல் ஒவ்வொரு கதைகளும் வேறு வேறு களங்களை கொண்டதே இந்த தொகுப்பின் தனித்துவமாய் கருதுகிறேன்.

விஜயமகேந்திரனின் எழுத்துகள் மென்மேலும் பண்பட வாழ்த்துக்கள்.

Friday, November 12, 2010

கிராமங்களை ஒழித்த சரக்கு..ஒரு காலத்தில் காலை முதல் மாலை வரை தோட்டத்தில் வேலைப்பார்த்துவிட்டு சாயும்காலத்தில் சாராயக்கடையில் தலையை மோந்து சாராயம் குடித்தவர்களை பார்த்திருக்கிறேன். அவர்களுடன் வாழ்ந்தும் இருக்கிறேன். ஆனால் இன்றைய கிராமங்களை நினைக்கவே பயமாய் இருக்கிறது எங்கு பார்த்தாலும் யாரைப்பார்த்தாலும் மதுவிலேயே கரைகிறார்கள்.
நகரத்தில் இருப்போர்களுக்கு தினமும் 8 மணி நேர வேலை இருக்கிறது அதற்கு பிறகுதான் சரக்கடிக்கிறார்கள், ஆனால் கிராமத்தில் அப்படி இல்லை காலையில் வேலைக்கு போகும் போதே ஒரு குவாட்டரை உள்ள விட்டுகிட்டுதான் போறாங்க மீண்டும் மாலையில் வந்ததும் தொடர்கிறது. ஒருகாலத்தில் வீட்டில் விசேசம் என்றால் தண்ணி அடித்தவர்கள் இன்று தினமும் தண்ணி அடிக்கிறார்கள். ஏன் எப்போதும் பாக்கெட்டில் பாட்டிலை வைத்து தண்ணி அடிக்கும் இளைஞர் முதல் வயதானவர்கள் வரை பார்த்தேன். பெண்கள் எல்லாம் கோவில் வாசலின் ஆண்கள் எல்லோரும் டாஸ்மாக் வாசலில்.

எங்கு போகும் இந்த நிலை பயமாய் இருக்கிறது. ஊருக்கு ஊர் தாபா எப்போதும் தண்ணியிலேயே தவிக்கிறது இன்றைய கிராமத்து இளைய சமுதாயம், அரசாங்கம் அவர்களுக்கு ஊத்தி கொடுத்து கொண்டிருக்கிறது?

Sunday, October 24, 2010

காஞ்சிவரம் - திரைவிமர்சனம்

என்னடா இது படம் வந்து பிரகாஷ்ராஜ் அவார்டெல்லாம் வாங்கின பின்னாடி விமர்சனமான்னு எல்லோரும் யோசிப்பிங்க.. ஆனா நான் இப்போதானே பார்த்தேன் அதான்.

முதல்ல படம் பார்த்த உணர்வை சொல்லிடறேன் ஏனா?? படம் பார்த்து முடிச்சுட்டு 5 நிமிஷத்துகுள்ளவே எழுத ஆரம்பிச்சுட்டேன். மனசுக்குள்ள பிரகாஷ் ஏற்படுத்துன பாரம் இன்னும் இருக்கு, அவர் கடைசிய கேமராவை பார்த்து சிரிச்ச சிரிப்பு இன்னும் என் கண்ணுல இருக்கு, அவருக்கும் அவர் மனைவிக்கும் இருக்கும் பாசம் மனசுல வருடுது. மொத்ததுல ஒரு நல்ல படம் பார்த்த பீல் மனசுல இருக்கு.. நல்ல படம் பார்த்தது சந்தோசமாவும், படத்தோட கதை பாராமாவும் அழுத்திட்டு இருக்கு.

கதை, பிரகாஷ் ராஜ் பார்வையில் பின்னோக்கி போகுது, அவரை ஜெயில்ல 2 நாள் பெயில்ல வரும்போது பஸ்ல அவரின் நினைவுகள் பின்னோக்கி போறதுதான் காஞ்சிவரம்.

காஞ்சிவரத்தில் ஒரு பட்டு நெசவாளி வேங்கடம், அவருக்கு திருமணம் ஆகி அவருக்கு மகள் பிறக்கிறாள், மகளுக்கு பெயர் சூட்டும் விழாவில் மகளுக்கு வாக்கு தரவேண்டியது அப்பாவின் கடமையாய் சொல்லப்பட்டு அதில் வேங்கடம் மகளுக்கு பட்டுப்புடவை போட்டு திருமணம் செய்வதாய் வாக்கு கொடுக்கிறார். நெசவாளி சோற்றுக்கே கஷ்டப்படும் நிலையில் வேங்கடத்தின் இந்த வார்த்தைக்கு ஊரே ஆச்சரியப்படுகிறது, அவரது மனைவி வருத்தப்படுகிறார்.

வேங்கடம் மனைவியிடம் தன்னிடம் சேமிப்பு உள்ளதாக கூறுகிறார், ஒரு சூழ்நிலையில் அவரின் சேமிப்பை வேறு வழியின்றி தங்கையின் வாழ்க்கை பிரச்சனையை தீர்க்க கொடுத்து விடுகிறார். மகளுக்கான பட்டு சேலை கனவு அவரை உறுத்திகொண்டே வருகிறது. அவர் அவர்வேலை செய்யும் ஜமீன் தாரிடம் இருந்து பட்டை திருடி புடவை நெய்ய ஆரம்பிக்கிறார், ஒரு கட்டத்தில் இவரின் கம்யூனிச கொள்கைகளால் வேலை நிறுத்தம் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் மகளின் கல்யாணத்திற்கு பட்டுப்புடவையின் அவசியம் ஏற்படுகிறது.

வேறுவழியில்லாமல் தன் மகளின் பட்டுபுடவைக்காக கொள்கை தளர்த்தி போராட்டத்தை நிறுத்தி வேலைக்கு செல்கிறார்கள். சிலநாட்களில் இவரின் பட்டுத்திருட்டு வெளிப்படுகிறது. ஜமீன்தாரிடம் அடிப்பட்டு, போலீஸில் ஒப்படைக்கப்படுகீறார். மகளின் திருமணம் தடைபடுகிறது. மகள் கிணற்றில் விழுந்து கை, கால் விழங்காத நிலையில் அவருக்கு பெயில் வழங்கப்பட்டு வரும் வழியில்தான் இதை முழுவதும் நினைத்துப்பார்க்கிறார்.
வந்து பார்க்கிறார் மகள் எந்த இயக்கமும் இல்லாமல் ஜடமாய் இருக்கிறார், இந்த நிலையில் அவளைப்பார்த்துக்கொள்ள துணையாக இருந்த வேங்கடத்தின் தங்கையும், அவரது கணவரும் பார்த்துக்கொள்ள முடியாது என்று கிளம்பிவிடுகிறார்கள். வேங்கடம் எந்த பெண்ணுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டாரோ அந்த பெண்ணுக்கு விஷம் வைத்துக்கொல்கிறார்.இறந்த மகளுக்கு தான் நெய்த முடியாத பட்டு சேலையை போர்த்திபார்க்கிறார்.


வேங்கடமாக பிரகாஷ்ராஜ், இந்த பெயர் படம் பார்க்கும்போது எங்குமே நினைவுக்கு வராது, ஒரு கதாப்பாத்திரத்தை எவ்வளவு உள்வாங்கி நடிக்கவேண்டும் என்பதற்கு பிரகாஷ்ராஜ் சாட்சி, விருது அவருக்கு சிறிய விசயம்தான். அவர் போராட்டத்தை கை விடுவோம் என்று பேசும்போது அவரின் முகத்தில் குற்ற உணர்ச்சி அருமையாய் காட்டி இருப்பார்.

படத்தின் மற்றும் ஒரு ஹீரோ ப்ரியதர்ஷன், அவரின் வசனமும் இயக்கமும் இந்த படத்திற்கு யானைபலம் என்றால் அது மிகையல்ல, ஒரு காட்சியில் தன்னிடம் உள்ள சேமிப்பை தங்கைக்கு கொடுத்துவிட்டு இரவு மனைவியிடம் கேட்பார் பிரகாஷ்ராஜ், என்ன வருத்தமா என்று, அதற்கு அவரின் மனைவி "இல்ல" ன்னு பதில் சொல்வார். அதற்கு பிரகாஷ்ராஜ் சொல்வார் "இப்போதான் பொய் சொல்றியா?? இல்ல இதுக்கு முன்னாடியே பொய் சொல்லி இருக்கியான்னு, அதன் பிறகு அவர் நீ கவலைப்படாத நான் வேறு சேமிப்பு வச்சிருக்கேன் அப்படின்னு சொல்லும்போது அவரோட மனைவி கேட்பாங்க " இப்போதான் பொய் சொல்றிங்களா இல்லை இதுக்கு முன்னாடி சொல்லி இருக்கிங்களான்னு"

தன் காதலன் ராணுவத்திற்கு போகும் போது அந்த பெண்ணின் மனதில் ஏற்படும் அதிர்வை ஒரே விசயத்தில் சொல்லிவிடுவதும், அதை அந்த பெண்ணின் அப்பா புரிந்து கொள்வதும் இயக்குனரின் திறமைக்கு ஒரு சான்று.

இரண்டாம் நடக்கிற கதையோடு ஒட்டி கம்யூனிசம் பேசுவது, போரில் பிரிட்டிஷ், ரஷ்யாவின் கூட்டணி, எங்கும் இழை அறுந்துவிடாமல் புடைவை நெய்திருக்கிறார் இயக்குனர்.

படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள், குறிப்பாக ஷம்மு, ஷ்ரியா, மற்றும் பிரகாஷ்ராஜ் நண்பராக நடித்திருக்கும் ஜெயக்குமார். களவாணி விமல் கூட ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இன்னும் நெஞ்சில் இருப்பது நிறைய.. கம்யூனிசம், தொழிற்சங்கம், முதலாளித்துவம், கணவன் மனைவி பாசம், மகள் மீதான பாசம், மகளின் எண்ண அதிர்வை புரிந்து கொள்ளும் அப்பா.

படத்தின் இசையும், ஒளிப்பதிவும் நம்மை கவனிக்கவே வைக்காத அளவுக்கு படத்துடன் ஒன்றிபோக செய்கிறது.

காஞ்சிவரம் : எத்தனை வருஷம் கழிச்சு வேணாலும் பார்க்கலாம் அது பட்டுப்புடவைதான்.

Friday, October 15, 2010

மீண்டும் ராஜேஷ் குமாருடன் நான்..நான் ஒரு காலத்தில் தினமும் ஒரு ராஜேஷ் குமார் நாவல் படிப்பேன்.. எப்போதும் ராஜேஷ் குமார் கையில் இருப்பார். காலேஜின் என்னை பாடப்புத்தகத்துடன் பார்த்தவர்களை விட பாக்யாவுடனும் க்ரைம் நாவலுடனும் பார்த்தவர்களே அதிகம். நான் இடையில் மற்ற எழுத்தாளர்களின் பரிச்சயத்திற்கு பிறகு என்னால் ராஜேஷ் குமாரை படிக்க முடியவில்லை..( முடியவில்லை என்பதுதான் உண்மை).. ஊரே காதலிக்கும் வயதில் காதல் என்றால் பிடிக்காத ராஜேஷ்குமாரை படித்து வந்திருக்கிறேன் என்ன கொடுமை இது..

காரணம் அவரின் நாவலில் கதை ஆரம்பிக்கும்போதே முடிவு என் மூலையை எட்டி விடுவதே இதற்கு காரணமாக இருந்தது. ஆனாலும் விவேக் ரூபலாவின் சல்லாப விளையாட்டுக்கள் இல்லாத அந்த துரத்தல் எனக்கு பிடிக்கும். கனேஷ் வஸந்த் வந்த பிறகு விவேக்- ரூபலாவை நான் கைவிட்டு விட்டேன் என்று சொல்லலாம்.

நேற்று முன்னாள் ஒரு கடை முன்பு பஸ்ஸுக்கு காத்திருக்கும் நேரம் அமைய, வழக்கமாக அந்த நேரத்தில் கையில் எப்போதும் புத்தகம் வைத்திருக்கும் நான் வெறும் கையுடன் இருந்த நேரம் அது. கடையில் எதாவது புத்தகத்தை வாங்க மனம் அரித்தது திடீரென்று ஆசை பழைய நண்ப எழுத்தாளர்களை படிக்கும் ஆசை வந்தது எனக்கு.. சுபாவையும் பி.கே.பி ஐயும் தேடினேன். காரணம் நீங்கள் அறியாததது அல்ல.. இவர்களின் நாவல்களில் கொஞ்சம் கில்மா அதிகமாக இருக்கும் என்பதுதான் அது..

இருவருடைய நாவல் இல்லாமல் போக ராஜேஷ் குமாரின் "ஆபத்துக்கு பாவம் இல்லை" என்ற நாவலை வாங்க வேண்டியதாக போனது. வழக்கம் போல இரு வேறு கதைகளாகவே ஆரம்பித்தது கதை.. ரயிலில் மீன் திருடும் இருவருக்கு மீன் கூடையில் மனித கை கிடைக்கிறது.. இவர்கள் போலீஸில் மாட்ட அதை துப்பறிய கிளம்புகிறது போலீஸ். இன்னொரு புறம் காதலித்து கல்யாணத்துக்கு முன்பு கர்ப்பமாகும் ஒரு ஜோடி கருகலைப்பு செய்யப் போக டாக்டரின் தவறால் அந்த பெண் இறக்கிறார். அதை ஆள் வைத்து மறைக்க நினைக்க அது டாக்டருக்கு வில்லங்கமாக முடிகிறது.

இப்படியே எதிர்பார்த்த திருப்பங்களுடன் செல்லும் நாவல் எனக்குள் எந்த மாற்றத்தையும் நிகழ்த்தாமலே முடிந்து போனது. கதையை முடிச்சவிழ்க்க வரும் தொடர்பில்லாத கதாப்பாத்திரங்கள், எதிர்ப்பார்த்தே வரும் திருப்பங்கள்.. வழக்கம் போல காதல் எதிர்ப்பு, மோசமான டாக்டர்.. இன்னும் மாறவே இல்லை ராஜேஷ் குமார்.

அவர் மாறவில்லை.. ஆனால் நான் மாறிவிட்டேன்..

தோன்றியவை..
பெண்ணுரிமை

பெண்ணுரிமை கூட்டம்

அவசரமாய் கிளம்பிக்கொண்டிருந்தாள்..

சீக்கிரம் வரவேண்டும்

இல்லை என்றால்

அவர் திட்டுவார்..

ஆசைகள்

எத்தனையோ பெண்களின்

ஆசைகளும் உருவப்படுகிறது

புடைவையுடன் சேர்த்து

முதலிரவில்..

Monday, September 20, 2010

எப்போ திருந்தும் தமிழ் சினிமா??

என்னதான் தமிழ் சினிமா வளர்ந்துடுச்சு, நாங்க உலக சினிமா எடுக்கிறோம்னு பில்டப் கொடுத்துகிட்டாலும் அது 100ல ஒருபடம்தான் நல்ல படமா வருது… மீதி வர 99 படம் அரைச்ச மாவேதான்… நம்ம டைரக்டர் திருந்தி நல்ல படம் எப்போ எடுப்பாங்கன்னு ஒரு ஆதங்கத்துலதான் நாங்க இந்த கட்டுரையை எழுதுறோம். இது யாரையும் புண்படுத்தவோ, தனிபட்ட முறையில் காயப்படுத்தவோ அல்ல…

ஸ்கூல் போற பசங்க, ஸ்கூல் முடிச்சுட்டு காலேஜ் போறவங்க, இவங்கதான் லவ் பண்ணவே பொறந்தமாதிரி உங்க கதைல எப்போ பார்த்தாலும் விடலைகள வச்சே காதலிக்க வைக்கிறீங்களே, இதை பார்த்துட்டு ஊர்ல படிக்கிற பசங்க எல்லாம் நமக்கும் ஒரு பிகர் சிக்காதான்னு சுத்திட்டு இருக்காங்களே… எல்லாத்துக்கும் காரணம் நீங்க தானே ??


இது வரைக்கு சினிமா ஆரம்பிச்ச காலத்துல இருந்து காதலை தவிர வேற எதாவது உருப்படியா சொல்லி இருக்கீங்களா?? அட காதலையாவது ஒழுங்கா சொல்லி இருக்கீங்களா?? வயசுக்கு வரது முன்னாடியே காதலிக்கிறது, 8 வயசுல டூயட் பாடறது இதெல்லாம் எந்த ஊர்ல சார், ஏன் ஊரை கெடுக்கிறீங்க?? பருத்தீவீரன், பூ, இந்த படங்கள்ல காதலிக்கும் போது நாயகிகளின் வயசு என்ன?? உங்க வீட்டு பெண் இந்த வயசுல காதலிச்சா நம்ம பொண்ணுக்கு காதலிக்கிற அளவுக்கு பக்குவம் இருக்குன்னு உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா??

சமீபத்தில்வந்த களவாணியில் ஸ்கூல் யூனிபார்ம் பொண்ணை லவ் பண்ற மாதிரி கதை, இந்திய சட்டமே 18வயதுக்கு மேல்தான் பெண்களின் திருமண வயதுன்னு சொல்லுது ஆனா நீங்க ஸ்கூல் போற பொண்ணுக்கு கல்யாணம் ஆகற மாதிரி படம் எடுக்கிறீங்க?? காதல் சொல்ல வந்தேனில் கல்லூரிக்கு செல்லும் முதலாமாண்டு மாணவன் தன்னோட சீனியர் பொண்ணை லவ் பண்றான். எப்போதான் ஒரு மெச்சூர்டான காதலை படம் எடுப்பீங்க?

ஏன் சார் உங்க கதைல நல்லவங்களுக்கு காதலே வராதா?? ரவுடி, பொறம்போக்கு, அடியாளு, வெட்டியா சுத்துறவன் இவனுங்களையா பார்த்து தேடி பிடிச்சு கதாநாயகிங்க லவ்வுறாங்களே இது சாத்தியமா? உங்க ஹீரோயின்கள் எல்லோரும் ரவுடிகளை லவ் பண்றதால நம்ம பசங்க எல்லோரும் நாங்களும் ரவுடிதான்னு ரவுசு விட்டு வாழ்க்கைய கெடுத்துக்கிறது உங்களுக்குத் தெரியுமா??

பார்த்ததும் லவ் பண்ணிட்டு, ஹீரோ நல்லவன் வல்லவன்னு அப்பன் கூட அவன் என்னை நல்லா புரிஞ்சவன் அவன் கூட இருந்தாதான் நான் சந்தோசமா இருப்பேன்னு வசனம் பேசுறது ஏன்?? ஹீரோயினை பார்த்ததும் லவ் பண்ணிட்டு உன்னை நான் உன் உடம்பை பார்த்து லவ் பண்ணலன்னு வசனம் பேசுறீங்களே ஹீரோ எப்படி? நீங்க இப்படி உசுப்பேத்துறத பார்த்து ஊருக்குள்ள பாதிப்பேர் பாத்ததும் வர்றதுதான் மச்சி லவ்ன்னு வசனம் பேசி வாழ்க்கைய கெடுத்துகிறாங்களே அதுக்கு காரணம் நீங்கன்னு ஒத்துப்பீங்களா?

எவ்ளோ பெரிய ரவுடியா இருந்தாலும் க்ளைமாக்ஸ் 4 நிமிசத்துல ஹீரோயின் பேசுற மொக்கை வசனத்துல திருந்துறாங்களே ஏன்?? சொந்த புத்தியே கிடையாதா??

குடும்பக் கதை எடுக்கிறேன்னு நீங்க கொல்றது அதுக்கு மேல, மூத்தவர் ரொம்ப நல்லவர், இளைவர் எதுக்குமே ஆகாதவர் இவர்தான் ஹீரோ, அண்ணன் நல்லா இருக்கவரைக்கும் இவர் திருந்தவே மாட்டார், அப்புறமே தனியா நின்னு குடும்ப மானத்தை காப்பத்துவார், குடும்பமே இவரைப்பாராட்டும்… இன்னும் எவ்ளோ நாளைக்கு??

ஊர்ல ஒரு பெரிய மனுசன் அவருக்கு பிள்ளையோ, தம்பியோ ஹீரோ, அந்த பெரிய மனுசன் போனதும் இவர் வில்லனை பழிவாங்குவார் உஷ்ஷப்பா… முடியல…

ஆட்டோ ஓட்ற ஹீரோ, வேலைப் பக்கம் தலை வச்சு கூட படுக்காத ஹீரோ, குடிசை வீடுதான் ஆனா ரேபான் கிளாஸ், ரீபக் சூ, ரேமண்ட் சர்ட் தான் போடுவாரு யோசிங்க டைரக்டர் சார். எந்த கதையா இருந்தாலும், ஆப்பம் விக்கிறவ, வெத்தலை விக்கிறவ, வேலைக்காரி, டீச்சர் இப்படி உங்க பலான மேட்டரை கொண்டு வந்து சொருவுறத எப்போ சார் நிறுத்துவிங்க??

பெண் புரட்சி, பெண்ணியம், என் கதாநாயகி புதுமை பெண் அப்படின்னு எல்லாம் பேசிட்டு ஹீரோயினுக்கு தம்மாதூண்டு டிரெஸ் போட்டு டூயட் பாட கூட்டிட்டு போயிடுவிங்க, அவ்ளோ நல்லவரா நீங்க??

இல்ல தெரியாமதான் கேட்கிறேன் ஹீரோவோட தங்கச்சிய வில்லன் கெடுத்துட்டான்னா ஹீரோ கெடுத்தவன்கிட்ட போய் என் தங்கச்சிய கட்டிகோங்கன்னு கெஞ்சி கேட்கிறத விட கேனத்தனம் எதும் இல்லன்னு உங்க மண்டைல ஏறாதா??

நீங்க பலான கதைய எடுத்து யாராவது கேள்வி கேட்டால் ஊர்ல நடக்கிறதைதானே எடுக்கிறோம்னு நியாயம் பேசுவிங்க, ஊர்ல மக்களுக்கு சொல்றது நல்ல விசயம் எதும் நடக்கிறதே இல்லையா என்ன???

எந்த படம் எடுத்தாலும் இது வரைக்கு தமிழ் சினிமாவுல யாருமே செய்யாத கதைன்னு சொல்வீங்க… ஆனா ஆயா வடை சுட்ட கதையவே எடுப்பீங்க… ஏன் சார்??

எப்படிங்க உங்க ஹீரோயின் ஊர்ல இருக்க எல்லோருக்கும் புத்தி சொல்லிட்டு ஒரு ரவுடிய, பொருக்கியா பார்த்து தேடி பிடிச்சு காதலிக்கிறீங்க? அதும் ஹீரோ பஸ்ல பக்கத்துல இருக்க பாட்டிக்கு சீட் கொடுத்ததும் உங்க ஹீரோயின் லவ்வை ஆரம்பிச்சுடுவாங்க எப்படிங்க??

ஒரு ஊர்ல 2 ப்ரெண்ட்ஸ் ஊர்ல வேற பொண்ணுங்களே இல்லாத மாதிரி 2 பேரும் ஒரே பொண்ணை லவ் பண்ணுவாங்க, கடைசியா பிரெண்ட் ஷிப் தான் மச்சின்னு 2 பேரும் லவ் பண்ண பொண்ணு வேணாம்னு முடிவு பண்ணுவாங்க, அடபாவிங்களா?

தயாரிப்பாளர்களே நீங்க பணம் சம்பாதிக்கணுங்கறதுக்காக படத்துல பலான விஷயங்களை சேர்க்க சொல்றது நியாயமா?? கேட்ட அது கதைக்கு ரொம்ப அவசியமான சீன் அப்படின்னு ஒரு டெம்ளேட் வசனம் வேற.. ஹீரோயின் நீச்சலுடைல வருவதும், எதிர் வீட்டு ஆண்ட்டி பெருக்குறத குனிஞ்சு பார்க்கிறதும் கதைக்கு ரொம்ப அவசியமா சார்??

நீங்க உலகத்துலயே முதன் முறையான்னு சொல்ற படமெல்லாம் உலக தொலைகாட்சி வரலாற்றில் முதல் முறையாகன்னுதான் ரிலீஸ் ஆகுது ஏன்னு எப்போவாவது யோசிச்சிருக்கீங்களா??

கடைசியா ரசிகர்களுக்கு :

நீங்க கொடுக்கிற காசுக்கு நடிக்கிறவங்கதான் சினிமா கூட்டம், அவங்க பண்ற தப்புக்கெல்லாம் ரசிகர்கள் அதைத்தான் விரும்புறாங்க அதனாலதான் எடுக்கிறோம்னு அவங்க உங்க மேல குற்றம் சொல்றாங்க, நீங்க ஏன் இப்படி இருக்கீங்க?? நல்ல படங்களை ஓட வைங்க, மசாலா குப்பைகளை தூக்கி எறிஞ்சா அவங்க அந்த மாதிரி படம் எடுக்கணும்னு நினைக்ககூட மாட்டாங்க..

இதெல்லாம் ரொம்ப சின்ன லிஸ்ட், இதுமாதிரி ஆயிரமாயிரம் கேள்விகள் உங்களுக்குள்ள இருக்கலாம்.

அதை கமெண்டா போடுங்க, அட்லீஸ்ட் இதெல்லாம் படிச்சு அடுத்து படம் எடுக்க போற ஒரு படைப்பாளி திருந்தினாலும் சந்தோசமே…

தேசிய விருது – கமலுடன் மோதும் நடிகர்கள் சின்ன அலசல்

57 வது தேசிய விருதில் சிறந்த நடிகராக அமிதாப் அறிவிக்கப்பட்டதும் இந்திய திரை ரசிகர்களின் பல்ஸ் தானாகவே அதிகமாகி விட்டது. காரணம் இதுவரை சிறந்த நடிகர்களுக்காக3 முறை தேசிய விருது வாங்கியவர்கள் கமலும், மம்முட்டியும் மட்டுமே, ரேஸில் பின்னாடி வந்து கொண்டிருந்த அமிதாப் திடீரென்று இவர்களுக்கு சரியாக ஓட ஆரம்பித்திருக்கிறார். இவர்களை முந்துவாரா?? இல்லை இவர்களின் ஒருவர் முந்துவாரா என்று காத்திருந்து பார்க்க வேண்டும்.. இந்த மூவரை பற்றிய சிறிய அலசலே இந்த கட்டுரை;


அதிரடி கமல்

முதல் படத்திலேயே தேசிய விருதை பறித்தவர் கமல் ஹாசன், களத்தூர் கண்ணம்மாவுக்காக சிறந்த குழந்தை நட்சத்திரமாக விருதை வாங்கினார், அதன் பின்பு சிறந்த நடிகருக்காக, முன்றாம் பிறை, நாயகன், மற்றும் இந்தியனுக்காக அவர் விருதை பெற்றார் இதன் பின்பும் பெரிது எதிர்பார்க்கப்பட்ட படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை.

கமல் 1996 இந்தியனுக்கு பிறது தேசிய விருதை வாங்க வாங்க வில்லை, அதன் பின்பும் ஹேராம், அன்பே சிவம், விருமாண்டி போன்ற படங்கள் இறுதி வரை சென்றாலும் விருது கையில் வர வில்லை.

தேசிய விருதுக்கு இவரின் 7 படங்கள் இறுதி வரை வந்திருக்கிறது.

தேசிய விருதில் மட்டுமே இவருடன் போட்டி போட அமிதாப்பும், மம்முட்டியும் இருக்கிறார், இதை தவிர்த்து இவர் வாங்கிய விருதுகளுக்கு யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாது. இவர் பிலிம்பேர் விருதை 19 முறை வாங்கி இருக்கிறார், தமிழுக்காக 13, தெலுங்கில் 3, கன்னடத்தில் 2, மலையாளத்தில்1, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் சிறந்த நடிகருக்கான பிலிம் பேர் வாங்கிய ஒரே ஒருத்தர் இவர் மட்டுமே. இதுமட்டும் இல்லாமல் இவரின் தேவர் மகன் ஹிந்தி பதிப்பான “விரசத்”காக சிறந்த கதைக்கு ஹிந்தியிலும் விருது வாங்கி இருக்கிறார்.

இவர் தமிழக அரசின் சிறந்த நடிகர் விருதை 11 முறையும், ஆந்திர அரசின் நந்தி விருதை 3 முறையும், வாங்கியுள்ளார்.

இவரின இயக்கத்தில் வெளிவந்த ஹேராம் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் வெளியானது ஆனால் அந்த படம் பொருளாதார ரீதியாக தோல்வியடைந்தாலும் இன்றும் தமிழ் சினிமாவின் மைல்கல் படங்களின் அதும் ஒன்று.

இந்தியாவில் இருந்து ஆஸ்கரின் கதவை 7 முறை தட்டியவர் இவர் மட்டுமே. ஆனாலும் இவருக்கு ஆஸ்கர் மீது விருப்பம் இல்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துவருபவர்.

இது தவிரவும் இவரின் விருதுகள் எக்கசக்கம்.

லேட்டாக அசத்தும் அமிதாப்

இவரும் கமலைப்போலவே முதல் படத்திலேயே சிறந்த புதுமுக நடிகருக்காக தேசிய விருதை வாங்கியவர், அதன் பின்பு 1991 ல் சிறந்த நடிகருக்கான தேசிய விருது இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின்பு 15 வருட இடைவெளிக்கு பின்பு ப்ளாக் படத்திற்காக அவர் மீண்டும் சிறந்த நடிகராக தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். பின்பு சென்ற வருடம் வந்த பா படத்தில் அவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது இப்போது அந்த படம் அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை 3வது முறையாக பெற்றுத்தந்துள்ளது.

இவரை ஒரு பிலிம் பேர் கிங்க் என்று சொல்லலாம், இது வரை 29 முறை பிலிம் பேரில் சிறந்த நடிகருக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளார், 13 முறை வாங்கியும் உள்ளார், இது வரையும் இது சாதனையே, இது மட்டும் அன்றி 9 முறை சிறந்த துணை நடிகருக்காகவும் பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்க்ப்பட்டுள்ளார் இதுவும் சாதனையே..

இதுமட்டும் அல்லாமல் சிறந்த பாடகருக்காகவும் ஒரு முறை தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அதனால்தான் அவர் பிக் “பி

மம்முட்டி

மலையாள திரையுலகின் சிறந்த நடிகர்களில் இவரும் ஒருவர் இவர் 1990ல் முதல் தேசிய விருதை பெற்றார், பிறகு 1994 ல் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது, அதன் பின்பு 1999ல் டாக்டர் அப்பேத்கர் என்ற ஆங்கில படத்தில் நடித்தமைக்காக தேசிய விருதை வாங்கி இப்போது களத்தில் உள்ளார், பழசி ராஜாவுக்காக இவர் தேசிய விருதை வாங்கி இருந்தால் இவர் இன்று கமலை முந்தி இருப்பார், இவர் விட்டதால் இன்று அமிதாப் மேலும் ஒரு போட்டியாளராக சேர்ந்துள்ளார்.

இவர் கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை 7 முறையும், பிலிம்பேர் விருதை 8 முறையும் பெற்றவர். இவரின் பழசி ராஜாவில் இசையமைத்தற்கு இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

இந்த ரேஸில் முவ்வருமே நேர்க்கோட்டில் இருக்கிறார்கள், கமல் அடுத்து மன்மதன் அம்பு செய்கிறார் இது காமெடி படம் என்பதால இதில் தேசிய விருதுக்கான வாய்ப்பு மிக குறைவே.

ஆமிதாப்பின் 3 படங்கள் தயாரிப்பில் உள்ளது, சமீபகாலமாக அவர் கதை தேர்வில் மிக அக்கறை எடுத்து செய்வதால் அவரின் படங்கள் அவருக்கு பேரையும் விருதையும் வாங்கித்தருகிறது. அதற்கு கடைசி 5 வருடங்களில் அவர் வாங்கிய 2 தேசிய விருதுகளே சாட்சி.

அடுத்து மம்முட்டி, மலையாள திரையுலகம் சமீப காலமாய் கமர்ஷியல் பக்கம் திரும்பியதாலும் அங்கு உள்ள திரையுல நிலையும் நல்ல படங்கள் வருவதற்கு சாதகமாக இல்லை என்பதால் இவர் ரேஸில் சற்று பின் தங்குகிறார்..

தற்போதைய நிலையில் ரேஸில் அமிதாப் முன்னிலை வகிக்கிறார்.. முடிவு வந்த பிறகுதான் தெரியும்..


நறுமுகைக்காக

கண்ணதாசனின் நடந்த கதை..

நான் சமீபத்தில் முடித்த ஒரு நாவல், எனக்கு தெரிந்து நான் படித்த மோசமான நாவல்களில் ஒன்றாகதான் இதை கருதுகிறேன். எந்த உள்தேடலும் இல்லாமல் சாதாரணமாக ஒருதட்டு மக்கள் மேல் குற்றம் கூறி செல்கிறார் கண்ணதாசன் அதை என்னால் ஏற்க முடியாது. ஒரு பெண் விபச்சாரத்தையும் முறைகேடான உறவையும் விரும்பியே செய்வதாக சொல்கிறார். இந்த கதையின் நாயகன் மீது நமக்கு பரிதாபம் வரவேண்டும் என்பதற்காகவே கதையில் கதாநாயகன் சார்ந்த உறவுகளை கெட்டவர்களாக காட்டுவது எவ்விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

கதை என்றால் அப்படித்தான் எழுத்தாளனின் சுதந்திரத்தில் தலையிட கூடாது என்பதை நான் ஏற்கிறேன். அது எழுத்தாளன் சொல்லும் விசயம் சரியாகவும அது ஆராய்ந்தும் எழுதி இருக்கும் பட்சத்தில் விரும்பி விபச்சாரம் செய்வதாகவும், தந்தையுடன் தவறாக இருப்பதாகவும் சொல்லும் இவர் அந்த கதாபாத்திரத்தையும் சற்று பேச விட்டிருக்கலாம் காரணம் என்னவென்று தெரிந்திருக்கும்.

இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போது எனக்குள் எவ்வித பாதிப்புமே நிகழவில்லை. மாறாக கண்ணதாசன் மீது சற்று கோபம்தான் வந்தது.

மேலும் ஒரு கடுப்பு, இது புது புத்தகமே 20ரூபாய் தான் இதை நான் பாரீஸில் பழைய புத்தக கடையில் 20 ரூபாய்க்கு வாங்கினேன்.

Tuesday, September 14, 2010

நன்றி மறந்த ஷங்கர்

10 வருடங்களுக்கு முன்பு எந்திரன் கதையை ஷங்கருக்கு கொடுத்தவர் சுஜாதா. கமல் செய்வதாக இருந்த ரோபோ, பிறகு ஷாருக்கான் வசம் போனது, அவருக்கும் ஷங்கருக்கும் தயாரிப்பில் பிரச்சனை வர, ஐங்கரனை வந்து சேர்ந்தது ரோபோ, ஷங்கரின் பட்ஜெட்டிலும் செலவிலும் ஆடிப்போன ஐங்கரன் கை விரித்து விட வேறு வழியே இல்லாமல் சன்னை தஞ்சமடைந்தார் ஷங்கர், இவ்வளவு மெனக்கெட்டிருந்தாலும் ஷங்கர் நன்றி மறந்தது நியாயமா??

மலேசியாவில் கேசட் வெளியிடும் போதே எதிர்ப்பார்த்தேன் இந்த படத்தில் சுஜாதாவின் பங்கை வெளிப்படுத்துவார்கள் என்று, ஆனால் யாரும் வாயே திறக்க வில்லை, சுஜாதா இறந்ததும், அவர் தனக்கு எந்திரனின் முழு ஸ்க்ரிப்டை முடித்து கொடுத்து விட்டார் அதனால் எந்த பிரச்சனையும் கிடையாது என்று சொ ன்ன ஷங்கர், படம் முடியும் போது மறந்தது ஏன்?

சன்பிச்சர்ஸ்க்கு இணை கிடையாது, ஷங்கர் தான் உலகின் உயர்ந்த டைரக்டர், ரஜினி உலகத்திலேயே ஒருத்தர்தான், எந்திரனில் வேலை பார்த்த லைட் மேன் கூட உலகில் சிறந்த லைட் மேன் என்ற ரேஞ்சுக்கு கிடைப்பவர்களூக்கு எல்லாம் ஜால்ரா தட்டுவதை பொழப்பாக வைத்திருக்கும் வைரமுத்து, சக எழுத்தாளனை மறந்தது ஏன்?? வைர முத்துக்கு மனசே கிடையாதா??

தாளாத நிலையிலும் சுஜாதா எந்திரனுக்காக எழுதினார் என்றது இவர் சொல்லியே எல்லோருக்கும் தெரியும் ஆனால், படம் முடிந்ததும் மறந்தது ஏன்??

சுஜாதா என்ற படைப்பாளியின் திறமை யை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் பயன் படுத்திக்கொண்டவர் ஷங்கர், என்னதான் பிரம்மாண்டம் என்று படம் காட்டிகொண்டிருந்தாலும் சுஜாதாவின் கற்பனையே அதற்கெல்லாம் காரணமாக இருந்திருக்கிறது..

சுஜாதா போன்ற படைப்பாளி அருகில் இல்லையென்றால் இன்று எந்திரன் எடுக்கும் அளவுக்கு ஷங்கர் வளர்ந்திருக்க முடியாது. இன்றைக்கு எந்திரனுக்கு கிடைக்கும் அத்தனை எதிர்ப்பார்ப்புக்கும் மையமாக இருந்தவர் சுஜாதா.

எந்திரன் வெளிவந்து ஷங்கரின் இயக்கத்தை விட சுஜாதாவின் வசனங்களும் அவரது பங்களிப்பும் அதிகம் பேசப்படும் போது உணர்வார் ஷங்கர். கண்டீப்பாக இது நடக்கும்..


நறுமுகைக்காக

ரஜினி காணாமல் போவார்..

தலைப்பை பார்த்து குதிப்பவர்கள் முழுவதும் படிக்கும் வரை காத்திருக்க கேட்டுக்கொள்கிறேன்.

1975 ல் அபூர்வ ராகங்களில் கதவை திறந்து கொண்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ரஜினி, அதன் பிறகு அவரின் கேரியரில் இதுவரை அவரின் இடத்திற்கு யாரும் போட்டியும் போடவில்லை, அவர் இடத்தை வேறு யாருக்கும் விட்டு தரும் நிலையும் வரவில்லை.

தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினி ஒரு மறக்க முடியாத சக்தி, இவரின் ஸ்டைல் மட்டுமே இவரின் ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருக்கிறது என்றால் இது மிகையல்ல.

இது வரை 153 படங்களை நடித்து முடித்திருக்கிறார் ரஜினி, இதில் கன்னடா, தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி போன்ற மொழிப்படங்களும் அடக்கம்.

16 வயதினிலே படத்தில் ரஜினியின் அட்டகாசமான நடிப்புடன் கூடிய ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது. அதுவே அவருக்கு பெரிய திருப்பு முனையாகவும் அமைந்தது. அதற்கு பின்பு அவரின் இத்தனை படங்களில் அவரின் நடிப்புக்கு தீனி போடும் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.

இது வரை அவரை நல்ல நடிகராக மக்களுக்கு காட்டிய படங்கள் இரு கைவிரல்களுக்குள் அடங்கிவிடும். என்னதான் தன்னுடைய ஸ்டைல் மக்களிடையே பிரபலம் என்றாலும் நல்ல படங்களைத் தேடி நடிக்காதது ஒரு நடிகனாக ரஜினியின் தோல்வியே.

இதற்கு முன்பு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் தியாகராஜபாகவதர். அவர் பல திறமைகளில் கொடிகட்டிப்பறந்தவர். ஆனாலும் தமிழ் சினிமாவின் வரலாற்று அழிவில் சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில்தான் தமிழ் சினிமாவின் காலங்களே தொடங்குவதாக எண்ணிக்கொள்ளத் தோன்றுகிறது; அப்படி பார்த்தோமானால் சினிமாவை சரியாக தன் சொந்த வாழ்க்கைக்கு பயன் படுத்திக்கொண்டவர் எம் ஜி ஆர். ஆனால் தமிழ் சினிமாவின் ரசிகர்களால் சிறந்த நடிகராக பார்க்கப்பட்டவர் சிவாஜி.

சிவாஜி மற்றும் எம் ஜிஆர் இருவரும் சம அளவு ரசிகர்களை கொண்டிருந்தாலும் காலம் கடந்தவர்கள் சினிமாவை பார்க்கும் போது மாஸ் ஹீரோக்களோ தயாரிப்பாளர்களை வாழவைத்தவர்களோ மட்டுமே சிறந்த நடிகராக இருக்க முடியாது. சிறந்த நடிகர் என்றால் இன்னமும் எம் ஜி ஆரை பின்னுக்குத்தள்ளி சிவாஜி வந்து நிற்கிறார். காலப்போக்கில் தமிழக முதல்வராக மட்டுமே எம்ஜி ஆர் பாக்கப்படுவார் சிறந்த நடிகராக சிவாஜியே இருப்பார்.

இந்த விசயத்தை பார்க்கும் போது ரஜினி, எம்.ஜி. ஆர் வரிசையில் வருகிறார், இவரால் வாழ்ந்த தயாரிப்பாளர்கள் நிறைய, இவரின் ஸ்டைலுக்கு ரசிகர்கள் எக்கசக்கம், ஆயினும் இவரால் எம்.ஜி ஆரைப்போல் தனக்கு கிடைத்த வரவேற்ப்பை காலம் கடந்து வைத்துக்கொள்ளும் நிலைக்கு மாற்றிக்கொள்ள முடியவில்லை. அதற்கான வாய்ப்பு 1996 ல் வந்தாலும் அதை சரியான முறையில் கையாளாமல் விட்டு அது கை நழுவிப்போனதும் அனைவரும் அறிந்ததே.


1990 க்கு பிறகு கடைசி 20 வருடங்களில் அவர் நடித்த படங்கள் தளபதி, மன்னன், அண்ணாமலை, பாண்டியன், உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி. இதில் பாபா, பாண்டியன் தவிர அனைத்து படங்களுமே வெற்றிப்படங்கள். ஆனால் இதில் ரஜினியில் நடிப்பு பேசப்பட்டது தளபதி, பாட்ஷாவில் மட்டுமே. ரஜினியின் ரசிகர்கள் மற்றப்படங்களையும் கண்டீப்பாக மெச்சுவார்கள்.

ஆனால் காலங்கடந்த ரசிகர்கள் இந்த படங்களை பார்க்கும் போது மிக மட்டமான படமாகத்தான் தெரிகிறது. இதற்கு காரணம் இவர் எப்போதும் போன தலைமுறை மக்களுக்காகவே படம் எடுக்கிறார். அடுத்த தலைமுறை மக்களை அவர் கண்டுகொள்வதே இல்லை.

இன்று வரை இவரின் சிறந்த படமாக பார்க்கப்படுவது 16 வயதினிலே, முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், மூன்று முகம். இதில் எல்லாம் இவரின் நடிப்பு தனி முத்திரை பதிக்கும் வகையில் அமைந்திருக்கும். இப்படி ஒரு ரஜினியை இப்போதெல்லாம் தேடினாலும் கிடைக்க வில்லை…

இவரின் சகநடிகரான கமலஹாசன் தயாரிப்பாளர்களால் பெரிதும் விரும்ப படாதவராக கூட இருக்கலாம், ஆனாலும் இவரின் மைல்கல்கள் இவரை எதிர்கால சினிமா விரும்பிகளை வசியப்படுத்தி வைத்திருக்கிறது. கமலின் படங்கள் எப்போதும் ரசிகனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதாகவே அமைகிறது, அவர் செய்யும் நகைச்சுவைப்படங்கள் உட்பட.

குணா படம் வந்த போது பார்க்காதவர்கள் ஏன் அப்போது பிறக்காதவர்கள் கூட இன்று அந்த படத்தை மெய் சிலிர்க்க பார்க்கிறார்கள். அந்த படம் அப்போது மக்களிடையே தோல்வி படமாகவே அமைந்தது. அப்போதைய ரசிகர்களின் மனநிலை, அதே போல் அன்பே சிவமும், விருமாண்டியும் கூட சொல்லலாம்.

அதற்காக கமல் கமர்ஷியல் படங்கள் தரவே இல்லையா என்று கேட்கலாம்… ஆனால் நான் நடித்த கமர்ஷியல் படங்களை நானே பார்க்க விரும்ப வில்லை என்பதை அவரே சொல்லி அவருக்கான தனிப்பாதையும் அமைத்திருக்கிறார். இங்கு அவரின் காப்பி அடித்தல் திறமையை பேசுவது சரி ஆகாது.

ரஜினி என்ற ஸ்டைல் புயல் நீண்ட நாட்கள் தமிழ் சினிமா மனதில் நிற்காது. அதன் காரணம் ரஜினியும் கமர்ஷியல் என்ற புயலில் அடித்துச்செல்லப்பட்டு விட்டார், ஹிந்தியில் கடைசி காலங்களில்ஆமிதாப் வயதுக்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தன்னை ஒரு நல்ல நடிகனாக காட்டிக்கொண்டுள்ளார்.

அமிதாப்பின் அடுத்த தலைமுறையான அமீர்கான், ராஜா ஹிந்துஸ்தானி வரை டூயட் பாடிக்கொண்டிருந்தவர், அதன் பின்பு தனக்கான களம் அது அல்ல என்று புரிந்து பெப்லீ லைவ் வரை வந்துள்ளார், இது போன்ற படங்களை எல்லாம் ரஜினி யோசித்து கூட பார்த்திருக்க மாட்டார் என்பது நிச்சயம்.

இத்தனை வயதுக்கு பின்பும் ரஜினி எந்திரன் போன்ற கமர்ஷியல் சினிமாவில் நடிக்க வேண்டிய அவசியம் என்ன?? வசூல் ரீதியாக எந்திரன் பேசப்படலாம், டெக்னிகலாக பேசப்படலாம், ரஜினியில் நடிப்பு?? கேள்விக்குறியே??

நறுமுகைக்காக


Thursday, September 9, 2010

பிள்ளையார் சுழி


நானும் ஒவ்வொரு முறை வலைபூ எழுதணும் ஆரம்பிச்ச நாள்ல இருந்து என் கீ போர்ட் என்னிடம் பிடுங்கப்படுகிறது.. ஏன்?? கொய்யால போதும்டா சீன் எழுத தெரியலனாலும் சீன் ஓவரா போடதன்னு நீங்க சொல்றது வாஸ்தவம் தான்..

என்ன பண்றது ஸ்டெத்ஸ் பிடிச்சவன் எல்லாம் டாக்டரும் இல்ல, கீ போர்ட் பிடிச்சவன் எல்லாம் ரைட்டரும் இல்ல.. என்னை இந்த ௨ பாரா எழுத ஊக்குவித்த என் குலதெய்வம் லக்கிலுக் அவர்களை மனதில் கொண்டு இனியொரு சதி சாரி விதி செய்வோம்.. இது என்னனு கேட்காதீங்க இனிமே எழுதலாம்னு இருக்கேன்னு சொல்றதுக்கு நான் கொடுக்கும் பில்ட் அப் (இதற்கான தமிழ் வார்த்தை யோசித்தலில் இரு நிமிடம் வீணாகி விட்டதில் நான் பெரும் துன்பம் அடைகிறேன்)

எல்லோரும் தொடர வாழ்த்துங்கள்..

Monday, March 15, 2010

சில நேரங்களில் என் காதல் கிறுக்கலாய்...


♥ கண்களாய்
உனை கேட்டால்
நீ
ஏனடி
கண்ணீரானாய்...♥♥

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

உனக்கு
என்
எழுத்துக்கள்
கிறுக்கல்களாய்
இருக்கலாம்..
ஆனால்
எனக்கு
அது
எனக்குள்
இருக்கும்
நீ....♥

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

உன்னை மறக்க
ஒரு நிமிடம் கேட்டால்..
என்னை இறக்க சொல்கிறாயே..
ஓ..
நான் இறப்பதும்
உன்னை மறப்பதும்
ஒன்றுதானோ...

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
விட்டில்
பூச்சியாய்
சுற்றி சுற்றி
வருகிறேன்
அது
என் இறுதி
ஊர்வலம் என்று
தெரியாமல்...

♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
மரணம் ஒரு நாள்
அவஸ்தை...
காதல்
வாழ்நாள் அவஸ்தை...
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥
அள்ள அள்ள
குறையாதது
அட்சயபாத்திரம் மட்டுமல்ல..
அவளின் அழகும்தான்...
♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥ ♥

காதலும் நானும்...


♥ என்
காதலும்
காற்றும்
ஒன்றுதான்..
என்
கைகளுக்கு
கிடைப்பதும்
இல்லை
இது
இல்லாமல்
நான்
வாழ்வதும்
இல்லை..♥♥

/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\/\

துடிக்கவா..??
உன்னை
நினைக்கவா??
என்று
கேட்டது
என்
இதயம்
ஏன் தெரியவில்லை
அதற்கு????
உன்னை
நினைக்கவே
அது
துடித்துக் கொண்டிருக்கிறது
என்று...

******************************