Wednesday, February 2, 2011

பெண் என்ன செய்தாள்..???


நீண்ட இடைவெளிக்குப் பின்னும், பெரிய யோசனைக்குப் பிறகுதான் இதை எழுத ஆரம்பித்திருக்கிறேன். காரணம், இயற்கையின் படைப்பில் அனைத்து உயிர்களுக்கும் சமமாய் அளிக்கப்பட்ட உரிமைகளே சக உயிருக்கு மறுக்கப்படுவது ஏன் என்ற கேள்விதான் இந்தப்பதிவு..

நாம் என்னதான் சட்டதிட்டங்கள் வைத்து வளர்ந்தாலும் படைப்பின் சாரம்சம் ஒன்றே ஒன்றுதான் அது "ஒரு அப்பா அம்மாவுக்கு பிறந்து, ஒரு அப்பா அம்மாவாக மாறி, ஒரு அப்பா அம்மாவை இந்த பூமிக்குத் தருவது" நா.பார்த்த சாரதியின் குறிஞ்சி மலர் வரிகள். கோடிகள் சம்பாதித்தாலும், 24 மணிநேரம் எனக்கு போதவில்லை என்று உழைத்தாலும் இது மட்டுமே சாரம்சமாக இருக்கிறது.

மக்களுக்காக வாழ்ந்தவர்கள் மட்டுமே இதில் விதிவிலக்கு, மக்கள் மனங்களில் வரலாறாக அவர்கள் கொண்டு சேர்க்கப்படுகிறார்கள். அதனால் அவர்களின் ஆயுள் காலம் நீடிக்கப்படுகிறது. சிலர் சாகவரமும் பெறுகிறார்கள். ஹிட்லர் நல்லது பன்னாரா அவரும்தானே வரலாற்றுல இருக்காருன்னு கேள்வி கேட்க கூடாது.

இனவிருத்தியே பாலுணர்வின் அடிப்படை நோக்கமாக இருந்தாலும், மனிதன் இனவிருத்தியையும் தாண்டி அதில் சந்தோசம் அனுபவிக்கிறான் என்பதே உண்மை. இருக்கிறது அனுபவிக்கிறான், அது அவனுக்கு கிடைத்த வரப்பிரசாதம் அனுபவிக்கிறான். எல்லாம் சரி, இது சமூகத்தில் சிலருக்கு மறுக்கப்படுவது ஏன்?

எல்லா உணர்வுகளைப்போலத்தானே பாலுணர்வும் அதுவும் அதனுடைய தேவைகளை அவ்வப்போது குறிப்பால் உணர்த்தும், பசித்தால் சாப்பிடும் நாம் பாலுணர்வுக்கு போடும் தடை ஏன்? சமுதாய ஒழுக்கங்களும், சமுதாய சீர்கேடும் இதில் இருக்கிறது என்பது உங்கள் வாதமாக இருந்தால், விதவைகளுக்கும், இளம் வயதில் விவாகரத்து வாங்கியவர்களுக்கும் இது மறுக்கப்படுகிறதே ஏன் ?

அவர்களுக்கு வடிகால்? இந்த சமுதாயம் எப்போதும் பாலுணர்வில் ஆண்களுக்கு சாதகமாக மட்டுமே பேசுகிறது. மனைவி இறந்தால் உடனே அவனுக்கு திருமணம், என்னக் காரணம் சொன்னாலும் அடிப்படை பாலியல் தேவைதானே? ஏன் இந்த உணர்வு பெண்ணுக்கு மறுக்கப்படுகிறது? எல்லா உயிருக்கும் பொதுவான ஒரு உணர்வு கணவன் இல்லாதவளுக்கு இருக்க கூடாது என்பது என்ன நியாயம்?

அவளின் பாலுணர்வை அடக்கவேண்டும் என்று சொல்கிறது இந்த சமுதாயம், தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் சொன்னவர்கள் இருந்த பூமி ஆனால் அந்த பசியை விட இது கொடூரமானது சமுதாய இன்னல்களைத் தரக்கூடியது.

இதற்கெல்லாம் விடை ? மறுமணங்கள் முழுமனதாய் ஏற்கப்படவேண்டும், அவர்களையும் பெண்ணாகவே கருதும் சமுதாயம் வேண்டும், ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே நியாயம் வேண்டும். திருமணத்தட்டில் ஆண் எப்படிப்பார்க்கப்படுகிறானோ அப்படியே பெண்ணும் பார்க்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு மகளீர்தின அனுதாபங்கள்.. ஒரு உயிரை இந்த பூமிக்குத் தரும் பெண் எந்த நிலையிலும் அவளுக்கான உரிமைகளைப் பெற முடியவில்லை..

நான் ஒரு எழுத்தாளனாய் இருந்திருந்தால் இன்னும் தொடர்ந்திருக்கலாம் என்னால் ஏனோ முடியவில்லை..