Monday, December 13, 2010

சாருவின் கோலகல விழா..

சாரு டிசம்பர் 13 புத்தக வெளியீடுன்னு சொன்னதுமே முடிவான விசயம் நான் புத்தக வெளியீட்டுக்கு செல்வது, 6 மணி விழாவுக்கு 4 மணிக்கே கிளம்பினேன், காரணம் எனக்கு காமராஜர் அரங்கம் தெரியாது, தட்டுத்தடுமாறி தி.நகரில் நண்பர் எழுத்தாளர் விஜயமகேந்திரனின் உதவியுடன் அரங்கத்திற்கு வந்து சேர்ந்தேன். சமோசா, டீ எல்லாம் முக்கியம் இல்லை முதல்ல குஷ்புவை பார்க்கணும்னு ஆசையில் நேராக அரங்கத்திற்கு உள்ளே நுழைந்தோம்.

அப்போதுதான் மனுஷ்யபுத்திரன் மேடைக்கு அழைக்கப்பட்டிருந்தார், அப்பாடா சரியான நேரத்திற்கு வந்தாச்சு அப்படின்னு ஒரு மனத்திருப்தியோட தனியே தன்னந்தனியேன்னு ஒரு சீட்டை பிடிச்சு அமர்ந்தேன்.

நான் மேடையில் பார்த்த முகங்கள் அனைத்தும் என் வாழ்நாளில் முதன் முறையாக பார்க்கிறேன். பெரும் சந்தோசம் எனக்கு 17 வருடமாய் படிப்பவன் முதன் முறையாக படைப்பாளிகளை பார்க்கும் அனுபவம் வார்த்தைகள் இல்லை விவரிக்க. என் பெயரில் பாதியை வைக்கும் அளவுக்கு பாதித்த மதனும் என் எதிரே..

நான் படிக்க ஆரம்பிக்க காரணமாய் இருந்த மதன், நான் வியந்துருகும் மனுஷ்யபுத்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், இவரின் கேள்விகுறியிலும், தேசாந்திரியிலும், அவருடன் நானும் சகப்பயணியாகவே அவருடன் பயணித்திருக்கிறேன். மிஷ்கின், நந்தலாலாவை திட்டும்போதெல்லாம் முதல் ஆளாய் எதிர்த்திருக்கிறேன். காரணம் மிஷ்கின் என்ற படைப்பாளி, அது காப்பியாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை எனக்கு அது மிஷ்கின் படம்தான். என்னைப்போல் தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு இதுவே உயர்ந்தப்படம். தமிழ் சினிமாவில் நான் மிக எதிர்ப்பார்க்கும் ஒரு படைப்பாளி..

இவர்களை எல்லாம் நான் பார்க்க காரணமாய் இருந்த சாரு.. சாருவின் எழுத்துக்களை நான் கடந்த இரண்டு வருடங்களாகத்தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இவரின் ராஸலீலா, எக்ஸ்டென்ஸியலிசமும் பேன்ஸிபனியனும், இந்த இரண்டுபுத்தகங்கள் மட்டுமே முழுவதும் வாசித்திருக்கிறேன். படிப்பின் என்னுடைய அடுத்தகட்டம் சாரு என்று கண்டீப்பாக சொல்வேன். சுஜாதா, ஜெயகாந்தன் காட்டிய மொழிகளுடன் மேலும் புதிய அனுபவத்திற்கான மொழியை எனக்கு கொடுத்தவர் சாரு.

உங்களை எல்லாம் சாருவின் எழுத்துக்கள்தான் வசீகரிக்கும், ஆனால் என்னை வசீகரித்தது அவரின் பெயரும் அவரின் வாழ்க்கையும்.. அவரின் படைப்புகள் எனக்கு புரிந்தாலும் புரியாமல் போனாலும் நான் அவரின் வாசகன், அவரைப்போல வாழ ஆசைப்படுபவன்.. அவர் முன் வீசப்படும் ஆபாச வார்த்தைகள் அவர் முன்பு எப்படி திரண் இன்றி சாகிறதோ அதுப்போல் என்னாலும் முடியவேண்டும் என்று ஆசைப்படுபவன்.

சரி விழாவுக்குப் போகலாம்..

பேசியவர்களின் அனைத்துக்கருத்துகளையும் இங்கு என்னால் சொல்ல முடியாது, என்னைச் சேர்த்து அணைத்தக் கருத்துக்களை மட்டும் உங்களுடன் பகிர்கிறேன்.

முதலில் மனுஷ்யபுத்திரன் பேசும்போது பாதி அரங்கம் காலியாய் இருக்கிறது என்று கவலைப்பட்டார், நிச்சயமாக வருத்தப்படவேண்டிய விசயம், தமிழ் படிப்பவனின் படிப்பு ரசனையை உயர்த்தாமலே வைத்திருக்கிறார்கள் அச்சு ஊடங்கள், தினத்தந்தியும் குமுதமும் படிப்பவன் மேலே வரவேண்டுமானால் அவர்கள் அவனுக்கு படிப்பின் ரசனையை எடுத்துக்கூற வேண்டும்..

நான் ஒரு காலத்தில் குமுதமும், ஆனந்த விகடனும் தவிர வேறு புத்தகங்களே இல்லை என்பது போல் இதுதான் எழுத்து உலகமே என்று வாழ்ந்திருக்கிறேன்.. அப்போது என் வாசிப்பிற்கு கிடைத்தவர் மதன் மட்டுமே.. காரணம் எனக்கு அடுத்த கட்டத்தை அறிமுகப்படுத்த யாருமே இல்லை, நான் கிராமத்தில் இருந்து வந்தவன், எங்கள் ஊரில் நூலகம் இல்லை, நான் படிக்க அரம்பிக்கும் போது எனக்கு கிடைத்ததெல்லாம் அதிகபட்சம் கல்கி.. எந்தசாமி புண்ணியமோ எனக்கு இணையம் பரிச்சயமான பின்புதான் நான் என்னை அடுத்தக்கட்ட வாசிப்பிற்கு நகர முடிந்தது.

நிச்சயமாய் ஒரு எழுத்தாளனின் புத்தக வெளியிடு கடற்கரையில் நடக்கும் , அதற்கான அடிப்படைகளை நாம் அடுத்த தலைமுறைக்கு கடத்தி செல்ல வேண்டியது நமது கடமை. நீங்கள் செய்த அந்த பணி இன்று நான் இந்த அரங்கிற்குள் அமரக்காரணம், இதைத் தொடர்ந்து செய்தால் நிச்சயம் சாமனியக்கும் நம் இலக்கியமும் மொழியும் சென்றடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மதன், சாருவின் மீதான அவரின் பார்வை நான் அவரை தொடர்வதாலோ என்னவோ என்னுடைய பார்வையாகவே தெரிந்தது. சாருவின் நெஞ்சு நிமிர்த்தி குற்றம் சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை, கமல்ஹாசனாக இருந்தாலும் இளையராஜாவாக இருந்தாலும் சாருவிடம் எனக்கு மிக பிடித்த விசயம் அவரின் காம்ப்ரமைஸ் இல்லாத எழுத்து, ஒரு எழுத்தாளனாய் என் எழுத்துக்களால் உன்னை துதிக்கவேண்டிய அவசியம் இல்லை என்று யாரிடமும் நீங்கள் சொல்லும் அந்த நேர்மைக்கு சிரம் தாழ்த்துவது தவிர வேறு வழியே இல்லை. சாரு சொல்வதை கொஞ்சம் மென்மையாக சொல்லுங்கள் என்று மதன் சொன்னது சாருவின் மீது அவர் வைத்திருந்த அன்பு.

மிஷ்கின் வந்தவேலையை தவறாக செய்தவர்.. ஏன் மிஷ்கின்?? இது போல் மேடை கிடைக்கும் போதுதான் பேச முடியும் என்று உங்கள் கதையை பேச தாராளமா ப்ரஸ் மீட் வைத்துஆனந்த விகடன் பேட்டியோ, குமுதம் பேட்டியோ கொடுத்திருந்தால் உலகம் முழுவதும் உங்கள் கருத்து சென்றடைந்திருக்குமே?? நான் நந்தலாலாவிற்கு கஷ்டப்பட்டேன் என்று சொன்னீர்களே?அதே போல் ஒரு எழுத்தாளனும் கஷ்டப்பட்டும் எழுதிய எழுத்துக்கள் மக்கள் கைக்கு சேரும் மேடையில் நீங்கள் செய்தது என்ன நியாயம் என்று தெரியவில்லை. சாருவின் எழுத்துக்களை நான் படிக்க வில்லை 2 பக்கம்தான் படித்தேன் அதுவே எனக்கு கிளர்ச்சியாக இருந்தது ஒரு படைப்பாளியை இதை விட நீங்கள் கேவலப்படுத்தி இருக்க வேண்டாம், நீங்கள் 50 வருடம் படிக்க புத்தகம் வாங்கி வைத்திருப்பதாய் சொன்னீர்கள் ஆனால் படிக்கிறீர்களா? என்று சந்தேகம் வருகிறது எனக்கு. நீங்கள் ஒரு 600 பக்க புத்தகம் படித்ததாக சொன்னீர்கள் "நம் முன்னோர்கள் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள்" இதைப்படித்ததும் அந்த புத்தகத்தை ஓரமாக வைத்துவிட்டேன் என்றீர்களே.. நீங்கள் எப்படி படைப்பாளி?? உங்களின் கஷ்டத்தை புரிந்து கொள்ளவில்லை என்று கஷ்டப்படும் நீங்கள், சாருவின் புத்தகத்தை சரோஜாதேவி தோற்றது என்ற போது என்ன நிலையில் அவர் இருந்திருப்பார் என்று யோசித்தீர்களா? படிக்கலன்னா படிக்கலன்னு சொல்லிட்டு போங்க.. நல்லி குப்புச்சாமி செட்டியார் சொல்லவில்லையா நான் முழுவதும் படிக்கவில்லை என்று. அதுதான் வயது முதிர்ச்சி கொடுத்த அறிவா?? உங்கள் நந்தலாலாவை பார்க்காமல் குப்பை என்று சொல்லி இருந்தால் எவ்வளவு நொந்திருப்பீர்கள்.. அந்த வேதனையை நீங்கள் சாரு கொடுத்திருக்கிறீர்கள்.

தேகம் என்ற ஒற்றை வார்த்தைக்கு இதைத்தான் எழுதி இருப்பார்கள் என்று சினிமாகாரன் புத்தியில் நீங்கள் பேசியது நீங்கள் மீண்டும் உங்கள் மீதான அபிப்பிராயத்தை உரசிப்பார்க்கவைத்திருக்கிறீர்கள்.இதற்க்காக சாரு நொந்து கொள்வாரே தவிர வருத்தப்படமாட்டார் என்று எல்லோருக்கும் தெரியும்.. இதற்க்காக சாரு கொடுத்த பதிலடி "நச்" சாரு நிவேதிதாவை படிக்க வில்லை என்றால் உங்களால் சாருவை புரிந்துகொள்ள முடியாது. சாருவின் வார்த்தையில் சொன்னால் மிஷ்கின் நுனிப்புல் கூட மேயாதவர்.
(போதும் மிஷ்கினை விட்டுவிடலாம் இது முடியாது)

அடுத்து பேச வந்தவர் எஸ்.ரா அவர் பேச்சும் என்னை சக பயணியாக்கிக்கொண்டது. எழுத்தை பேச்சிலும் கொண்டு வந்தவர்களின் நிச்சயம் எஸ்.ரா வும் இருப்பார். வதைகள் எங்கு ஆரம்பிக்கிறது என்று ஆரம்பித்து எழுத்தாளனின் அவலத்தை நினைவு படுத்திப் பகிர்ந்தார். பாலியலையும், மதத்தையும் ஏன் நாம் விவாதிக்க விரும்புவதே இல்லை என்ற அவரின் பேச்சு அருமை.

இறுதியில் சாரு நன்றியுரையுடன், தமிழ் எழுத்தாளனுக்கு ஏற்பட்ட அவல நிலை கண்டு கோபம் கொண்டார். பனகல் பார்க்கில் புல் தின்றதும், திருவல்லிக்கேணியில் எஸ்ராமகிருஷ்ணனும், தானும் சோறில்லாமல் பட்ட கஷ்டங்களையும் சொல்லி கோபப்பட்டார், சாருவின் கோபத்திற்கு தகுதியுடையதே இந்த தமிழ் சமுதாயம், பாரதி முதல் ஸ்டெல்லா புரூஸ் வரை இந்த அவலம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வரும்காலமாவது எழுத்தாளர்களுக்கு நல்லகாலமாய் அமைய வேண்டும் என்பது என் ஆசை.

சாருவின் அத்தனைப்புத்தகங்களும் வாங்கி இருக்கிறேன். சாருவிடன் ஒரு கையெழுத்து வாங்க ஆசைப்பட்டேன், அவர் புத்தக சந்தையில் செய்கிறேன் என்று சென்று விட்டார். கையெழுத்துக்குக் காத்திருந்தாலும் கை கொடுத்ததை நினைத்துக்கொள்கிறேன். மனுஷ்யபுத்திரனிடம் கையெழுத்தை பெற்றுக்கொண்டேன்.

மதனிடன் பெற நினைத்தேன் ஆனால் விழா முடியும் வரை அவர் இல்லாததால் என்னால் வாங்க முடியவில்லை. எப்படியும் அவரையும் புத்தக சந்தையில் பிடித்துவிடவேண்டும்.

இரவே இந்த பதிவை எழுத நினைத்தேன், ஆனால் "மழையா பெய்கிறது" படிக்க ஆரம்பித்ததால் அதை முடித்துவிட்டு இதை எழுதி இருக்கிறேன்.

பின் குறிப்பு: முன்னாடி எழுதிய குஷ்பு விசயம் சும்மா ஒரு கிளுகிளுப்புக்காக சேர்த்தது. குஷ்பு வரவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் அவர் இல்லாததாலேயே என்னால் இவ்வளவு கவனிக்க முடிந்தது எனபதை ஒப்புக்கொள்கிறேன்.

முக்கியமான விசயம் : சாருவை சண்டைக்காரராக மட்டும் பார்ப்பவர்களுக்கு, அவர் ஒரு அற்புத மனிதர்.

நன்றியுரையில், விழா ஏற்பாடு செய்தவர்களை மறந்துவிட்டேன் நாளை பதிவில் சொல்லிவிட வேண்டும் என்று ஒரு கடைநிலை மனிதருக்கு நன்றி கூறவேண்டும் என்று நினைத்த நல்ல மனிதர் சாரு.

என்னிடம் படம் எதும் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். :)

எழுத்துப்பிழைகளை மன்னிக்கவும்..