Friday, October 14, 2011

விடைதெறியாக் கேள்விக்குறிகள்..

எல்லோருக்கும் போலதான் எனக்கும் ஒவ்வொரு நாளும் விடிகிறது. எல்லா நாட்களிலும் ஏதாவது ஒரு சேர்மானம் சேர்ந்துகொண்டே வருகிறது அப்படிப்பட்ட ஒரு நாளைத்தான் உங்களுடன் பகிரப்போகிறேன்.

கண்டீப்பாக இது உங்கள் பொழுதுப்போக்குப்பதிவோ, நகைச்சுவைப் பதிவோ சினிமா பதிவோ தரும் உணர்வைத் தராது அதற்காக மன்னிப்புகேட்டுகொள்கிறேன்.


வழக்கமான மரணவீடாய் இல்லாமல் சந்தோஷ இளையோடல்கள் இருந்து கொண்டே இருந்தது என் பெரியப்பாவின் மரணம். காரணம் என் பெரியப்பாவின் வயது 87, அவரின் மனைவி மக்களே அவரின் மரணத்தை எதிர்நோக்கி காத்திருந்த காலக்கட்டத்தில்தான் நடந்தது அவரின் மரணம். அவரின் மரணம் எங்கள் சொந்தங்களின் ஒரு மற்றுமொருச் சங்கமமாக மட்டுமே இருந்தது.

87வயது வரை யாருக்காக வாழ்ந்தாரோ அவர்களே அவரின் மரணத்தை எதிர்ப்பார்த்து காத்திருந்திருப்பார்களானால் அந்த மனிதன் இத்தனை வருடம் வாழ்ந்த வாழ்க்கையே கேள்விக்குறியாகத்தான் வளைந்து நிற்கிறது.

முதுமை அவர்களை குழந்தையாக மாற்றுகிறது. எல்லோரிடமும் அன்பையும் அரவணைப்பையும் எதிர்ப்பார்க்கிறது. எல்லோரும் தன்னை கவனிக்க வேண்டும் என்று ஏங்கிறது. ஆனால் ஒரு முதியவரை ஒரு சமுதாயமும் அவரின் குடும்பமும் ஓடித்தேய்ந்த சைக்கிளைப்போல் மட்டுமே பார்க்கிறார்கள். என்றாவது ஒரு நாள் அதைத் தூக்கி ஓரமாய்ப்போடக் காத்திருக்கிறார்கள்.

இப்படி ஒரு மரணம் என்னையும் பெரிதாய் பாதிக்கவில்லை, எவ்வித உணர்வும் இல்லாமல் சென்னையை நோக்கி கிளம்ப சேலம் பஸ்நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். சேலம் பஸ்நிலையம் எப்போதும் விபச்சாரத்திற்கு பெயர் போனது. பெங்களூர் பஸ் நிறுத்தம் அருகே அவர்கள் எப்போதும் இருப்பார்கள்..அன்று அதேபோல் 2 பெண்களும், 3 திருநங்கைகளும் வாடிக்கையாளர் தேடி வந்து சேர்ந்திருந்தார்கள். 2 பெண்கள் குடும்பப்பெண்களைபோலவும், திரிஷா போல் பச்சைக்குத்திய ஒரு திருநங்கையும், முகம் முழுக்க மேக்கப் போட்டிருந்த ஒரு திருநங்கையும் இவர்களுடன் ஒரு சுமாரான ஒரு திருநங்கையும் வழியில் போகும் ஆண்களிடன் மெதுவாக அணுகி " போகலாமா" கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவர்களை வம்புக்கு இழுக்கும் வாலிபர்களையும், கிண்டல் செய்து சத்தமாய் பேசிக்கொண்டிருந்தவர்களையும் அவர்கள் பொருட்டாகவே கருதாமல் போனிலும், நேரிலும் அவர்கள் தொழிலைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். 4பேர் கஷ்டமர்களுடன் கிளம்ப ஒரு சுமாரான அழகி மட்டும் தனியே காத்திருக்க வேண்டியதாகி போயிருந்தது..

இவர்களும் சாமானியர்கள்தானே?? இவர்களுக்கும் நம்மைப்போல் வாழும் ஆசை இருக்கத்தானே செய்யும்?? மற்றவர்கள் தேவைக்கு பயன் படும் இவர்களை சமுதாயம் எப்போதும் இழிவாகத்தானே பார்க்கிறது இதைத் தெரிந்தும் இவர்கள் இதைச்செய்யக்காரணம்?? அவர்கள் வாழவேண்டும் என்ற கட்டாயம்தானே??

இதற்குபதிலாய் சாகலாம் என்று அதிமேதாவித்தனம் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்லப்போவது இல்லை.. எதோ ஒரு நிலையில் இந்தசமுதாயம் இவர்களை இந்த நிலைக்குத்தள்ளி இருக்கிறது..


இந்த நேரத்தில் என் முன்னே மிக பரிதாபமான நிலையில் நொண்டிக்கொண்டு வந்தாள் ஒரு வயதான பாட்டி 10ரூபாய் கொடுத்ததும் கும்பிடு போட்டார். எதிரே இருந்த சிறு திட்டை அவளால் ஏற முடியாமல் மிக சிரமப்பட்டு கொண்டிருந்தவளை கை பிடித்து மேலேற்றி ஒரு தூண் ஓரத்தில் உட்கார வைத்தேன். அவளைப்பார்க்க மிக பரிதாபமாக இருக்க டீ சாப்பிடுறீங்களா என்றேன். ம் என்றாள். டீ வாங்கி கொடுத்து விட்டு அவளிடம் நீங்க எந்த ஊர் என்றேன் "விருதாச்சலம்" யாரும் இல்லையா " வீட்டுகாரர் இல்ல" ஒரே ஒரு பையன் மட்டும்" பையன் என்ன பண்றார் " மேஸ்திரி" நீங்க ஏன் அவங்களை விட்டுட்டு வந்தீங்க?? அவன் பொண்டாட்டி பேச்சை கேட்டுட்டு தினமும் அடிக்கிறான், மருமகள் சோறு போட மாட்டேங்குறா அதான் வந்துட்டேன் வந்து 3 மாசம் ஆச்சு யாரும் என்னைத் தேடி வரல என்றார்.

சாப்டிங்களா என்றேன், மதியம் வாங்கினேன் சாப்பிட்டு கொஞ்சம் நைட்டுக்கு வச்சிருக்கேன். கால் ரொம்ப வலிக்குது படுக்கணும் இப்போ படுத்தா போலீஸ் காரங்க வந்து விரட்டுவாங்க, 2 நாள் முன்னாடி படுத்திருந்தப்போ 2 குடிகாரங்க சண்டை போட்டு கால் மேல விழுந்துட்டாங்க அதான் அடிபட்டுடுச்சு..அதானாலதான் நடக்க முடியல என்றாள். இப்படியே போய் ஒண்ணுக்கு போயிட்டு திரும்ப வந்து படுத்துக்குவேன்.

ஏன்மா இப்படி?? எவ்ளோ நாள் கஷ்டப்படுவீங்க?? என்னப்பா பன்றது?? இங்க இங்கயே இப்படி வாங்கி தின்னுட்டு சுத்திட்டு இருப்பேன், இருக்க 4 கடைக்காரங்ககிட்ட சொல்லி இருக்கேன் நான் செத்துட்டா தூக்கி புதைச்சுடுவாங்க என்று சொல்லிவிட்டு சரிப்பா நான் கிளம்புறேன் என்றார்.. என்னிடம் எந்த வார்த்தையும் இல்லை, என்னைப்போல் ஒரு சக உயிர் எனக்கு உண்டான இதே கனவுகளையும், ஆசைகளையும் சுமந்த உடல் இன்று இந்த பூமியை விட்டு போகும் நாளுக்காக காத்திருக்கிறது. என்னால் இதை எப்படி மாற்ற முடியும்? எதுவும் தோன்றவில்லை. 100 ரூபாயைக் நீட்டி நாளைக்கு டாக்டரைப்பாருங்கன்னு சொன்னேன்.

அவர் அந்த காசை வாங்க வில்லை வேண்டாம்யா நீயே வச்சுக்கோ, இது சரியா போயிடும்னு சொன்னாள். இல்லம்மா இதை வச்சுக்கோங்க நாளைக்கு சாப்பாட்டுக்காவது வச்சுக்கோங்கன்னேன். வாங்கிட்டு கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு சொல்லிட்டு கெளம்பிட்டாள்.

கிட்டத்தட்ட 70 வருட வாழ்க்கையில் அவள் சம்பாதித்தது என்ன? முடியாத காலத்தில் சாப்பாடு கூட இல்லாமல் சாவை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறாள்.

வார்த்தைகளற்று பார்த்துகொண்டிருக்கிறேன் வாழ்க்கையை எனக்கான முடிவு என்னவாக இருக்கும்??

9 comments:

 1. வாங்க ராஜ்பாட்டை முதல் வருகைக்கு நன்றி.. very sad என் எழுத்தைப்பார்த்தா??

  ReplyDelete
 2. Good post... no words to say...

  ReplyDelete
 3. மனது கனக்கும் பதிவு! :(

  ReplyDelete
 4. இப்படி பல மனிதர்கள் மனிதம் செத்துப் போன நாடுகளில் :)

  ReplyDelete
 5. ம் நல்ல பதிவு.....வயதானவர்கள் படும் கஷ்டத்தை பார்க்கும் பொழுது நாளைக்கு நமக்கோ என்ற எண்ணம் வந்த வேகததில மறைந்து வி டுவது தான்....

  ReplyDelete
 6. I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
  Nice One...
  Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News

  ReplyDelete