Monday, November 22, 2010

நானும் ஒரு ஞாயிறும்..

வழக்கமாக ஞாயிற்று கிழமை புத்தகத்துடன் அறையிலேயே கிடப்பது வழக்கம். நேற்றும் பாலக்குமாரனில் இரும்பு குதிரைகள் கொடுத்த குடைச்சலுக்கு பீச்சில் நின்று ஒரு தம்மடிக்க வேண்டும் போல் இருந்தது. இருந்தாலும் ஒரு நாள் பஸ்பாஸுடன் சென்னையை சுற்றிவருவது மட்டுமே நோக்கத்துடன் என் அறை நண்பனுடன் கிளம்பினேன்.

வழக்கமாக நான் பஸ்ஸில் அமைதியாக செல்லும் பழக்கம் இல்லாதவன். அதுக்காக பாட்டுப்பாடுவியான்னு கேட்காதீங்க. பஸ்ஸில் இருக்கும் ம் சுமாரான பிகருக்கு ரூட் விட்டுகிட்டே போவேன். சீட் கிடைச்சதும் புக் படிக்க ஆரம்பித்து விடுவேன். எங்க நேரம் பஸ் ஏறினதும் ஒரு சுமாரான பீஸ் கீடைச்சது என் நண்பனுக்கு அந்த பொண்ணுகிட்ட இருந்து நல்ல ரெஸ்பாண்ஸ், அதனால் அண்ணா நகர்ல இறங்க வேண்டிய நாங்கள் கிண்டிவரை செல்ல வேண்டியதாக இருந்தது. என் நண்பனுக்கு அந்த பெண் கொடுத்த கம்பெனி ஹைலி சென்சார்டு. (இதற்கு மாதர்சங்கத்திடம் இருந்து கடிதம் எதிர்ப்பார்க்கப்படுகிறது).

அதன் பிறகு என் நண்பனை ராயப்பேட்டையில் விட்டுவிட்டு சென்ற இடம் சென்னையில் புது ஷாப்பிங்க் மால் எக்ஸ்ப்ரஸ் அவென்யூ. வழக்கமாக நான் இங்கு சண்டே நடக்கும் சிறு நிகழ்ச்சிகளை பார்க்கவும், பெண்களின் தாராள மயமாக்கலை ரசிக்கவும் மட்டுமே. என்னால் அங்கு ஒரு குண்டூசி கூட வாங்க முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

உள்ளாடை தெரியும் மேலாடைகளையும், உள்ளாடைகளே மேலாடைகளாக தெரிந்ததும் நன்றாகவே இருந்தாலும், நான் பார்க்க கூச்சப்பட்டேன் ஆனால் யாரும் அதை அணிய கூச்சப்பட்டவர்களாய் தெரியவில்லை. வருபவர்கள் அனைவரிடம் எதோ பணக்கார செயற்கைதனம் மிகுதியாகவே பட்டது. கட்டிபிடித்து நடக்கும் காதலர்கள், துப்பட்டா போடாத பெண்கள், டைட் டீ சர்ட்கள், மினி ஸ்கர்ட்கள், லெக்கீங்க்ஸ், இது எல்லாமே தன்னை மேல் மட்டத்தினனாக காட்டி கொள்ள போடும் வேஷமாகவே பட்டது. அவர்களின் உண்மை வாழ்க்கையை காட்ட பயப்படுகிறார்கள். உலகம் நம்மை மதிக்காமல் போய் விடுமோ என்று தயங்குகிறார்கள்.

வெளியில் 12ரூபாய்க்கு கிடைக்கும் பெப்ஸியையும், கோக்கையும் 35 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவசியம் என்ன?? தெரியல, இங்கே கிடைக்கும் பொருட்கள் சென்னையில் தரமானவை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் சென்னையில் விலை அதிகமானவை என்று சொல்ல முடியும்.

என்னால் அதற்குமேல் அங்கே இருக்க முடியவில்லை வெளியேறினேன். வெளியே வரும்போது எதிரே இருக்கும் சர்ச் வாசலில் இரண்டு வயதான பிச்சைக்காரர்களை பார்த்து உங்களுக்கு இல்லை இந்த உலகம் என்று நினைத்துக்கொண்டேன்.

மனதில் மனிதரிடையே இருக்கும் ஏற்றத்தாழ்வு குறித்து எக்கசக்கமான யோசனையில் கடற்கரைக்கு செல்ல தீர்மானித்தேன். கண்ணகி சிலையில் இறங்கி 2 ரூபாய்க்கு 62 கிலோ என்ற என் என்எடையை பார்த்துக்கொண்டேன். இரண்டு இரண்டு ரூபாயாக சேர்த்து வாழ்க்கையை வாழும் அந்த அம்மாவை யோசித்தேன். இவங்களுக்கு ஸ்பெக்ராம் தெரியுமா? ஒபாமா தெரியுமா?? தான் ஏன் இந்த நிலையில் இருக்கிறோம் என்றாவது தெரியுமா??

கடற்கரை மணலில் நடந்தேன்.. காதலுக்கு கண் இல்லை ஆனால் வயசு உண்டு.. புதிய காதலர்கள் எதிரெதிராகவும், கொஞ்சம் பழையகாதலர்கள் கைகோர்த்தபடியும், சில ஆண்டுகளாக காதலிப்பவர்கள் மடியிலும் படுத்து கொண்டு காதலித்தார்கள். இவர்களின் நோக்கமெல்லாம் தாலிக்கட்டி முதலிரவு எப்போது நடக்கும்?? அதற்கு ஒத்திகைக்கு இடம் இதுவாக இருக்க கூடாதா என்பதாகவே இருப்பதாய் பட்டது.

குதிரையில் வாக்கிங்க் போனார்கள், சேரி சிறுவர்கள் பட்டாசு வெடித்தார்கள், மற்றவர்கள் எதையாவது தின்று கொண்டிருந்தார்கள். ஏன் இப்படித்தின்னுகிறார்கள் என்றே தெரியவில்லை.?திருவிழா, வீட்டில் விசேசம், டூர் எல்லாவற்றிலுமே திண்பது என்பது தமிழனுடன் பழகிவிட்டது.ஆனால் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலை மறந்துவிட்டார்கள். சமீபத்தில் வட இந்தியர்களிடம் இருந்து பாக்கு தின்ன கற்று இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் துப்புகிறார்கள். பார்க்கும்போதே முகத்தில் குத்த வேண்டும் என்று தோன்றுகிறது.

ஆண்கள் ஜட்டியுடன், குழந்தைகள் ஜட்டி கழண்டு போவது தெரியாமலும், பெண்கள் எதையும் மறைக்காமலும் குளித்தார்கள். பெண் போலீஸாரும் சக தோழிகளுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்கள். பெண்கள் குளிக்கும் இடத்தில் ஆண்கள் கூட்டமாய் ரசித்தார்கள். குடும்பத்துடன் வந்த ஆண்கள் சட்டையில்லாம தண்ணீரில் நின்று கொண்டு பெண்களையும், குழந்தைகளையும் கடலில் இழுத்துக்கொண்டிருந்தார்கள். தனியாக வந்திருந்த ஆண்களூம் நண்பர்களுடன் வந்திருந்த ஆண்களூம் பெரும்பாலும் டாஸ்மாக்கில் இருந்து வந்திருந்தார்கள். எல்லோரும் தன்னிலை மறந்த சந்தோசத்தில் இருந்தார்கள். இந்த கணம் எல்லோருக்கும் நிலைக்கட்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

சிறிது நேரம் நானும் அலையுடன் ஓடிப்பிடித்து விளையாடினேன், அலை சிலநேரம் என்னைப்பிடிக்க வேகமாய் வந்து கரையில் இருந்த மற்றவர்களைத் தொட்டு சென்றது. அவர்களும் அதை ஆர்பரித்தார்கள். இறுதியில் நான் விட்டுக்கொடுத்தேன் என்னை அடிக்கடி அலைத்தொட்டு சந்தோசப்படுத்தியது. நான் விட்டுக்கொடுத்ததற்காக கிளம்பும் போது என்பாதம் முழுக்க மணலை பரிசாக கொடுத்தது. எவ்வளவு மக்கள் அனைவருக்கும் தனித்தனி உலகம். நான் என் விதியை நொந்து கொள்வது போல்தானே அனைவரும் நொந்து கொள்வார்கள்.

மீண்டும் மனதில் குழப்பம் எதைத் தேடுகிறோம் எல்லோரும்?

குழப்பத்தில் கரையேறும் போது நீச்சல் குளத்திற்கு அருகில் இருக்கும் மரத்தடியில் மக்கள் கூட்டமாய் வேடிக்கைப்பார்த்துகொண்டிருந்தார்கள். நானும் கூட்டத்தோடு கூட்டமானேன். ஒரு ஜடா முடியுடன், கிழிந்து போன 3 பைகளும், கையில் 2 வாட்ச், கழுத்து நிறைய மணிகள், குளிக்காத உடம்பும், விளக்காத பல்லுமாய் ஒரு சாமியார் 3 குரங்குகளுடன் இருந்ததையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

என் மனதுக்குள் மீண்டும் குழப்பம் இவருக்கான தேடல் என்னவா இருக்கும்?? இவரும் இதே பூமியில் வாழும் ஜீவன் தானே?? இவரைசுற்றி தினமும் ஆயிரக்கண்க்கானோர் வருகிறார்கள் செல்கிறார்கள் இதையெல்லாம் இவர் எப்படி பார்ப்பார். பக்கத்தில் கடலே இருந்தாலும் குளிக்காமல் இருக்காரே?? ஒரு வேலை நம்மை பார்க்க இவருக்கு பைத்தியம் போல தெரிவோமோ?? அதிலும் தவறிருப்பதாய் தெரியவில்லை.

பிறப்பிற்கு பின் இறப்பை நிச்சயமாய் கொண்ட நாம் செய்யும் செயல்கள் பைத்தியக்காரத்தனம் தானே?? பணம், கவுரவம், மரியாதை மதிப்பு என்று வாழும் இந்த வாழ்கையின் முடிவும் மரணம்தானே??. நாம் இறந்த பிறகு எத்தனைநாள் இந்த உலகம் என்னை நினைத்திருக்கும்?? 15நாள்.. ??இறந்த பின் 15 நாள் இந்த உலகத்தில் என்னைப்பற்றி பேசுவதற்காக நாம் என் வாழ்நாள் முழுவதையும் போலியாகவே வாழ்கிறோம்.

நான் ஜெயகாந்தன், சுஜாதா, என்று பேசுகிறேன், இவருக்கு யாரைத்தெரியும், ஆனாலும் என்னைப்போல் இவரும் ஒரு ஜீவன் தானே?? மாதம் எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் போதவில்லை எனக்கும் என் குடும்பத்துக்குமே, ஆனால் தினமும் வெறுங்கையுடன் விழிக்கும் அவர் 3 ஜீவன்களுக்கு உணவளிக்கிறார். யாருடைய வாழ்க்கை உயர்ந்தது.??? கடவுளைக்கண்டது போல் இருந்தது, ஒரு நாள் முழுக்க அவருடன் இருக்கவேண்டும் என்று தோன்றியது.. அவர் எந்த ஊர் என்று கேட்டேன் சூளைமேடு பக்கம் என்றார், அப்பா அம்மா எல்லாம்?? இருக்காங்க பொண்டாட்டி பிள்ளைகளே போயிடுச்சு மத்தவங்க என்ன??

நெக்குறிகி போனேன், பெற்ற தாயை விட தன் மனைவியையும் பிள்ளையையும் நேசிக்கும் ஒரு ஜீவன், அவர்கள் இல்லை என்பதற்காக தன் வாழ்க்கையை இப்படியாக்கி கொண்டவன், இந்த மனிதனை எப்படி பார்ப்பது என்று எனக்குப்புரியவில்லை..

தினமும் இங்கேயேதான் இருப்பீர்களா என்று கேட்டுக்கொண்டு 50ரூபாயை கொடுத்தேன். அவர் நன்றி புன்னகையை பூக்கவும் இல்லை நான் எதிர்பார்க்கவும் இல்லை. வாழ்க்கையில் நான் சந்தித்த முக்கியமான நபரில் ஒருவராகத்தான் அவரைக்கருதுகிறேன்.5 comments:

 1. கண்கள் கலங்கியது தங்கள் பதிவைக் கண்டு. நெஞ்சம் நெகிழந்தது நண்பரே தாங்கள் செய்த சிறு உதவி கண்டு. இது போன்ற இளம்பருவத்தில் எழும் கேள்விகளே தேடல்களாய் மாறி நம்மைச் செலுத்துகின்றன. ஓயாது எழும் அலைகளாய்த் தோன்றி தோன்றி எதையோ சொல்லாமல் உணர்த்துகின்றன. நானும் உங்களைப் போன்று இச்சமூகச் சூழல்கள் கண்டு வருந்துகிறவன் தான். கேள்விகளாய் எழுப்பி விடை காண முயல்பவன் தான்.

  உங்கள் பதிவும் கேள்விகளும் சிலகாலங்கள் முன்பு என் உயிர்ப்பில் இருந்த என்னையே பார்ப்பது போல் இருந்தது. நன்றி

  ReplyDelete
 2. இன்னமும் வாழ்க்கையில் விடை தெரியாத கேள்விகளுடன் தான் வாழ்கிறோம். நண்பரே..

  ReplyDelete
 3. A very nice blog. My heart feels so hard now... Keep posting these kind of blogs.. Because atleast when we read this it will reminds us that we are still human beings...

  ReplyDelete
 4. Thanks Senthil... Super...

  ReplyDelete