Sunday, October 24, 2010

காஞ்சிவரம் - திரைவிமர்சனம்

என்னடா இது படம் வந்து பிரகாஷ்ராஜ் அவார்டெல்லாம் வாங்கின பின்னாடி விமர்சனமான்னு எல்லோரும் யோசிப்பிங்க.. ஆனா நான் இப்போதானே பார்த்தேன் அதான்.

முதல்ல படம் பார்த்த உணர்வை சொல்லிடறேன் ஏனா?? படம் பார்த்து முடிச்சுட்டு 5 நிமிஷத்துகுள்ளவே எழுத ஆரம்பிச்சுட்டேன். மனசுக்குள்ள பிரகாஷ் ஏற்படுத்துன பாரம் இன்னும் இருக்கு, அவர் கடைசிய கேமராவை பார்த்து சிரிச்ச சிரிப்பு இன்னும் என் கண்ணுல இருக்கு, அவருக்கும் அவர் மனைவிக்கும் இருக்கும் பாசம் மனசுல வருடுது. மொத்ததுல ஒரு நல்ல படம் பார்த்த பீல் மனசுல இருக்கு.. நல்ல படம் பார்த்தது சந்தோசமாவும், படத்தோட கதை பாராமாவும் அழுத்திட்டு இருக்கு.

கதை, பிரகாஷ் ராஜ் பார்வையில் பின்னோக்கி போகுது, அவரை ஜெயில்ல 2 நாள் பெயில்ல வரும்போது பஸ்ல அவரின் நினைவுகள் பின்னோக்கி போறதுதான் காஞ்சிவரம்.

காஞ்சிவரத்தில் ஒரு பட்டு நெசவாளி வேங்கடம், அவருக்கு திருமணம் ஆகி அவருக்கு மகள் பிறக்கிறாள், மகளுக்கு பெயர் சூட்டும் விழாவில் மகளுக்கு வாக்கு தரவேண்டியது அப்பாவின் கடமையாய் சொல்லப்பட்டு அதில் வேங்கடம் மகளுக்கு பட்டுப்புடவை போட்டு திருமணம் செய்வதாய் வாக்கு கொடுக்கிறார். நெசவாளி சோற்றுக்கே கஷ்டப்படும் நிலையில் வேங்கடத்தின் இந்த வார்த்தைக்கு ஊரே ஆச்சரியப்படுகிறது, அவரது மனைவி வருத்தப்படுகிறார்.

வேங்கடம் மனைவியிடம் தன்னிடம் சேமிப்பு உள்ளதாக கூறுகிறார், ஒரு சூழ்நிலையில் அவரின் சேமிப்பை வேறு வழியின்றி தங்கையின் வாழ்க்கை பிரச்சனையை தீர்க்க கொடுத்து விடுகிறார். மகளுக்கான பட்டு சேலை கனவு அவரை உறுத்திகொண்டே வருகிறது. அவர் அவர்வேலை செய்யும் ஜமீன் தாரிடம் இருந்து பட்டை திருடி புடவை நெய்ய ஆரம்பிக்கிறார், ஒரு கட்டத்தில் இவரின் கம்யூனிச கொள்கைகளால் வேலை நிறுத்தம் செய்யப்படுகிறது. அதே நேரத்தில் மகளின் கல்யாணத்திற்கு பட்டுப்புடவையின் அவசியம் ஏற்படுகிறது.

வேறுவழியில்லாமல் தன் மகளின் பட்டுபுடவைக்காக கொள்கை தளர்த்தி போராட்டத்தை நிறுத்தி வேலைக்கு செல்கிறார்கள். சிலநாட்களில் இவரின் பட்டுத்திருட்டு வெளிப்படுகிறது. ஜமீன்தாரிடம் அடிப்பட்டு, போலீஸில் ஒப்படைக்கப்படுகீறார். மகளின் திருமணம் தடைபடுகிறது. மகள் கிணற்றில் விழுந்து கை, கால் விழங்காத நிலையில் அவருக்கு பெயில் வழங்கப்பட்டு வரும் வழியில்தான் இதை முழுவதும் நினைத்துப்பார்க்கிறார்.
வந்து பார்க்கிறார் மகள் எந்த இயக்கமும் இல்லாமல் ஜடமாய் இருக்கிறார், இந்த நிலையில் அவளைப்பார்த்துக்கொள்ள துணையாக இருந்த வேங்கடத்தின் தங்கையும், அவரது கணவரும் பார்த்துக்கொள்ள முடியாது என்று கிளம்பிவிடுகிறார்கள். வேங்கடம் எந்த பெண்ணுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டாரோ அந்த பெண்ணுக்கு விஷம் வைத்துக்கொல்கிறார்.இறந்த மகளுக்கு தான் நெய்த முடியாத பட்டு சேலையை போர்த்திபார்க்கிறார்.


வேங்கடமாக பிரகாஷ்ராஜ், இந்த பெயர் படம் பார்க்கும்போது எங்குமே நினைவுக்கு வராது, ஒரு கதாப்பாத்திரத்தை எவ்வளவு உள்வாங்கி நடிக்கவேண்டும் என்பதற்கு பிரகாஷ்ராஜ் சாட்சி, விருது அவருக்கு சிறிய விசயம்தான். அவர் போராட்டத்தை கை விடுவோம் என்று பேசும்போது அவரின் முகத்தில் குற்ற உணர்ச்சி அருமையாய் காட்டி இருப்பார்.

படத்தின் மற்றும் ஒரு ஹீரோ ப்ரியதர்ஷன், அவரின் வசனமும் இயக்கமும் இந்த படத்திற்கு யானைபலம் என்றால் அது மிகையல்ல, ஒரு காட்சியில் தன்னிடம் உள்ள சேமிப்பை தங்கைக்கு கொடுத்துவிட்டு இரவு மனைவியிடம் கேட்பார் பிரகாஷ்ராஜ், என்ன வருத்தமா என்று, அதற்கு அவரின் மனைவி "இல்ல" ன்னு பதில் சொல்வார். அதற்கு பிரகாஷ்ராஜ் சொல்வார் "இப்போதான் பொய் சொல்றியா?? இல்ல இதுக்கு முன்னாடியே பொய் சொல்லி இருக்கியான்னு, அதன் பிறகு அவர் நீ கவலைப்படாத நான் வேறு சேமிப்பு வச்சிருக்கேன் அப்படின்னு சொல்லும்போது அவரோட மனைவி கேட்பாங்க " இப்போதான் பொய் சொல்றிங்களா இல்லை இதுக்கு முன்னாடி சொல்லி இருக்கிங்களான்னு"

தன் காதலன் ராணுவத்திற்கு போகும் போது அந்த பெண்ணின் மனதில் ஏற்படும் அதிர்வை ஒரே விசயத்தில் சொல்லிவிடுவதும், அதை அந்த பெண்ணின் அப்பா புரிந்து கொள்வதும் இயக்குனரின் திறமைக்கு ஒரு சான்று.

இரண்டாம் நடக்கிற கதையோடு ஒட்டி கம்யூனிசம் பேசுவது, போரில் பிரிட்டிஷ், ரஷ்யாவின் கூட்டணி, எங்கும் இழை அறுந்துவிடாமல் புடைவை நெய்திருக்கிறார் இயக்குனர்.

படத்தில் நடித்த ஒவ்வொருவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள், குறிப்பாக ஷம்மு, ஷ்ரியா, மற்றும் பிரகாஷ்ராஜ் நண்பராக நடித்திருக்கும் ஜெயக்குமார். களவாணி விமல் கூட ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இன்னும் நெஞ்சில் இருப்பது நிறைய.. கம்யூனிசம், தொழிற்சங்கம், முதலாளித்துவம், கணவன் மனைவி பாசம், மகள் மீதான பாசம், மகளின் எண்ண அதிர்வை புரிந்து கொள்ளும் அப்பா.

படத்தின் இசையும், ஒளிப்பதிவும் நம்மை கவனிக்கவே வைக்காத அளவுக்கு படத்துடன் ஒன்றிபோக செய்கிறது.

காஞ்சிவரம் : எத்தனை வருஷம் கழிச்சு வேணாலும் பார்க்கலாம் அது பட்டுப்புடவைதான்.

No comments:

Post a Comment