Monday, November 15, 2010

நகரத்திற்கு வெளியே



நான் போன தலைமுறை எழுத்தாளர்களையே படிக்காததால் நான் புதிய தலைமுறை எழுத்தாளர்களை படிக்கவே ஆரம்பிக்க வில்லை. சமீபத்தில் ஒரு புத்தக கடை நண்பரிடம் புதிய எழுத்தாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டு பல்ப் வாங்கியது என் மனதில் இருக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் நான் புதிய தலைமுறை எழுத்தாளர்களின் முதல் முதலில் நான் படித்த புத்தகம்தான் நகரத்திற்கு வெளியே. தலைப்புதான் வெளியே படிக்கும் போது நம்மை உள்ளே கொண்டு செல்கிறது புத்தகம்.

10 கதைகள் உள்ள தொகுப்பாக இருந்தாலும் என்ன வெகுவாக பாதித்தகதைகளை மற்றும் இங்கு பகிர்கிறேன். மேலும் இது விமர்சனம் அல்ல, ஒரு படைப்பாளியின் சுதந்திரத்தில் யாரும் தலையிடக்கூடாது என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. தாய்க்கு எல்லா குழந்தையும் அழகுதான் ஆனால் பார்ப்பவர்களின் பார்வைதான் மாறுபடும். கண்டீப்பாக விஜய் மகேந்திரன் கொடுத்தது அவரின் சிறந்த பிள்ளைகளைத்தான் அதில் என்னுடன் அதிகம் உறவாடிய, என்னை எனக்கு நினைவு படுத்திய குழந்தைகள் எனக்கு மிக அழகாக தெரிகிறார்கள் அவர்களைப்பற்றி மட்டுமே நான் எழுத ஆசைப்படுகிறேன். இதை படித்து என்னை விமர்சிக்கும் உரிமையும் உங்களுக்கு இல்லை ஏனெனில் இது என் எண்ணம் உங்கள் எண்ணத்தை ஒத்திருக்க வேண்டும் என்பது என் தவறல்ல.

நான் எப்போது எழுத்துக்களை ரசிப்பவன் இல்லை சில நேரங்களில் நமக்கு கருத்துடன் சேர்ந்து எழுத்தும் ரசிக்க கிடைக்கும் போது என் சந்தோசம் மேலும் அதிகமாகிறது. சமீபத்தில் ரெட்டைத்தெரு படித்த போது என்னால் எழுத்தை மட்டுமே ரசிக்க முடிந்தது கருத்துக்கள் காணாமல் போய் ஒரு ஆயாசம் தான் வந்தது. இதில் அந்த ஆயாசத்தை விஜய் மகேந்திரன் எனக்குத் தரவில்லை.

சிரிப்பு நான் இனி எப்போது சிறுகதைகளைப்பற்றி சிந்தித்தாலும் எனக்கு எப்போதும் நினைவுக்கு வரும் ஒரு கதையாக இருக்கும் .

ஒரு வேலையில்லாதவனிடம் சோகம் எப்போதும் இளையோடிக் கொண்டே இருக்கும். எனக்கும் ஒரு காலத்தில் இருந்தது அதை அப்பட்டமாக எனக்கு திருப்பி காட்டியது இந்த கதை. நானும் எத்தனையோ நாட்கள் சாப்பாடு இல்லாமல் கோவில் வாசலில் தனிமையில் அழுதிருக்கிறேன். இந்த கதை எனக்கு ஊதிய பலூனில் குண்டூசி ஏற்றியது போல் இருந்தது, படித்த வேகத்தில் என் கண்ணில் நீர் துளிக்க வைத்தது.

அடுத்து ராமநேசன் எனது நண்பன்.. வாழ்க்கையில் சில வேலைகளின் நாம் விரும்பியோ விரும்பாமலோ நம்முடன் இருக்கும் சிலரால் நம் வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் சந்தோசமாகவும் இருக்கும் அப்படிப்பட்ட ஒருத்தன்தான் இந்த ராமநேசன். எனக்கு ராமநேசனைப்போல் நண்பர்கள் கிடையாது ஆனால் நானே ஒருகாலத்தில் ராமநேசனாய் வாழ்திருக்கிறேன்.

இருத்தலின் விதிகள்
ஒரு சாமானியனின் வாழ்க்கையை அப்பட்டமாக தோலுரிக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் ஒரு வாசிப்பாளனின் நிலை இதுவாகத்தான் இருக்கிறது. ஒரு சாதரண குடும்பத்தில் வாசிப்பாளனாக இருப்பது எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும், 50 ரூபாய்க்கு புத்தகம் வாங்கினால் 100 கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இடையில் வரும் பத்திரிகைவெளியீட்டாளரின் பாத்திரம் மூலம் பத்திரிக்கையாளர்கள் மீதான சாயப்பூச்சை தெளிவாக உரித்திருக்கிறார் ஆசிரியர். வாழ்வியல் விதிகளே இவரின் இருத்தலின் விதிகளாய் இருக்கிறது.

நகரத்திற்கு வெளியே ஆண் எல்லா நிலைகளிலும் ஆண்தான் என்பதை சொல்லும் சிறுகதை இந்த கதையின் முடிவு பாதியிலேயே என்னால் யூகிக்க கூடியதாய் இருந்தது. இதுபோன்ற கதைகளில் சுஜாதா கைதேர்ந்தவராக இருந்தாலும் எழுத்து நடையில் முற்றிலும் வேறுபடுகிறார் விஜய் மகேந்திரன்.

இதுப்போல் ஒவ்வொரு கதைகளும் வேறு வேறு களங்களை கொண்டதே இந்த தொகுப்பின் தனித்துவமாய் கருதுகிறேன்.

விஜயமகேந்திரனின் எழுத்துகள் மென்மேலும் பண்பட வாழ்த்துக்கள்.

1 comment: